
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பகிர்ந்துகொண்ட தரவுகளின்படி, வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் கல்விக்காக கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 1.76 லட்சம் கோடி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் கீழ் இந்தியா டுடே ஊடகத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
2023–24-ம் நிதியாண்டில் மட்டும், கல்விக்காக ரூ. 29,000 கோடி வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டின் எண்ணிக்கையைவிட இது சற்று குறைவு. எனினும், இந்தியர்கள் கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ள இந்த தொகை திகைப்பூட்டும் வகையில் உள்ளது.
கடந்த 2014-ல் வெளியான மத்திய அரசு அறிக்கையின்படி, ஒரு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தை (IIT) அமைப்பதற்கான செலவு ரூ. 1,750 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பணவீக்கத்திற்கு ஏற்ப கணக்கிடும்போது 2025-ல் இந்த தொகை ரூ. 2,823 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட தொகை ரூ.1.76 லட்சம் கோடி. இதன் மூலம் சுமார் 62 ஐஐடிகளை உருவாக்கியிருக்க முடியும். அதே நேரம் கடந்தாண்டு அனுப்பப்பட்ட தொகையின் மூலமாக 10-க்கும் மேற்பட்ட ஐஐடி நிறுவனங்களை தொடங்கியிருக்கலாம்.
ஒரு தசாப்தத்திற்கு முன்பு, கல்விக்காக ஒரு ஆண்டில் அனுப்பப்பட்ட தொகை ரூ. 2,429 கோடியாக இருந்தது, கடந்த பத்தாண்டுகளில் இது மிகவும் குறைவாகும். அதிகபட்சமாக 2022–23-ம் நிதியாண்டில், ரூ. 29,171 கோடி அனுப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வழங்கிய தகவல்கள் அமெரிக்க டாலர்களில் இருந்தன. ஆனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பைப் பயன்படுத்தி இந்த தரவுகள் இந்திய ரூபாயாக மாற்றப்பட்டுள்ளன.
கடந்தாண்டில், உலகெங்கிலும் உள்ள நாடுகள் விசா விதிமுறைகளை கடுமையாக்கியதால், படிப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 15% அளவிற்கு குறைந்துள்ளது. குடியேற்ற பணியகம் வழங்கிய தரவுகளின்படி 2024-ல் 7,59,064 இந்திய மாணவர்கள் படிப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.