

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இந்திய ரூபாயின் மதிப்பு 90.55 ஆக சரிவைச் சந்தித்த நிலையில், இன்று காலை மேலும் சரிவடைந்து ரூ. 90.64 ஆக சரிந்துள்ளது.
இந்திய ரூபாய் வரலாறு காணாத அளவுக்கு சரிவைச் சந்திக்க இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் முக்கியப் பங்கை வகிக்கிறது. 2025-ல் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5.5 சதவீதம் சரிவைச் சந்தித்திருக்கிறது. ஆசிய நாடுகளில் மோசமான சரிவைச் சந்தித்துள்ள நாடு இந்தியா தான்.
இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்த பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7 அன்று 25% வரி விதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 27 அன்று கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டது. ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெய் இறக்குமதி செய்வதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அங்கிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதன் மூலம், போருக்கு இந்தியா உதவி வருகிறது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாக உள்ளது.
உலகின் 31 முதன்மை நாணயங்களில் துருக்கியின் லிரா மற்றும் ஆர்ஜென்டினாவின் பெசோவுக்கு அடுத்து இந்தியாவின் ரூபாய் உள்ளது. இவ்விரு நாடுகளைத் தவிர வேறு எந்தவொரு நாடும் இந்திய ரூபாயின் அளவுக்கு மதிப்பை இழக்கவில்லை.
Indian Rupee | US Dollar | American Currency | Indian Currency | Rupee Falls |