
போதுமான அளவுக்கு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப பொதுமக்கள் அவசரம் காட்டவேண்டாம் என்றும் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, சில வட மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக பெட்ரோல் நிலையங்களில் அதிகளவில் கூடுகின்றனர்.
போதுமான எரிபொருள் கையிருப்பை வைத்திருக்கவேண்டும் என்ற பீதியில் பொதுமக்கள் இவ்வாறு நடந்துகொள்வதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எக்ஸ் கணக்கில் இன்று (மே 9) வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியதாவது,
`இந்தியன் ஆயில் வசம் போதுமான எரிபொருள் கையிருப்பு நாடு முழுவதும் உள்ளது; எங்கள் விநியோக வழித்தடங்கள் சீராக இயங்குகின்றன. மக்கள் அச்சமடைந்து எரிபொருள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு எங்களது அனைத்து விற்பனையகங்களிலும் விற்பனைக்கு உள்ளது.
அமைதியாக இருந்து தேவையற்ற அவசரத்தைத் தவிர்ப்பதன் மூலம், உங்களுக்கு சிறப்பாக சேவை செய்ய எங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் எங்கள் விநியோக வழித்தடங்கள் தடையின்றி இயங்கி, அனைவருக்கும் தடையற்ற எரிபொருள் வழங்கலை அது உறுதி செய்யும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல, எரிபொருள் பற்றாக்குறை குறித்து பொதுமக்கள் பீதியடையவேண்டாம் என்று பாரத் பெட்ரோலியமும் தன் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.