
சலுகைகளை வழங்காவிட்டால் இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் நிலைப்பாடு மாறாது என்று அமெரிக்க அரசின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஹாசெட், இந்தியா அமெரிக்கா இடையில் இருப்பது ஒரு சிக்கலான உறவு என்றும் குறிப்பிட்டார்.
அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கும் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றுவதற்கும், ரஷ்யா மீதான அமெரிக்காவின் அழுத்தம் பேச்சுவார்த்தைகளில் பிணைக்கப்பட்டுள்ளதாக ஹாசெட் கூறினார். குறிப்பாக, அமெரிக்கப் பொருள்களுக்கு அதன் சந்தைகளைத் திறப்பது குறித்த இந்தியாவின் `விடாமுயற்சியுடன்’ இது தொடர்புடையது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், `இந்தியர்கள் அசைந்து கொடுக்கவில்லை என்றால், அதிபர் டொனால்ட் டிரம்ப் அசைந்து கொடுப்பார் என நான் நினைக்கவில்லை,’ என்று ஹாசெட் கூறினார்.
இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா 50% வரியை விதித்துள்ள நிலையில் இத்தகைய கருத்தை அவர் கூறியுள்ளார். இதில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்குவதற்காக விதிக்கப்பட்ட கூடுதல் 25% அபராத விதியும் அடங்கும்.
ஒன்றாக இணைவோம்
`இது மிகவும் சிக்கலான உறவு. அந்த அளவில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் டிரம்புக்கும் இடையே மிகச்சிறந்த உறவு இருக்கிறது... இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்றும், அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்றும் நான் நினைக்கிறேன். இறுதியில் நாங்கள் ஒன்றாக இணைவோம் என நினைக்கிறேன்’ என்றார்.
இந்திய-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை
இந்தியாவும், அமெரிக்காவும் ஜூலை 2025 வரை ஐந்து சுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி புது தில்லியில் திட்டமிடப்பட்டிருந்த ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை, கூடுதல் வரிகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது.
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் உள்பட பால் மற்றும் பண்ணை பொருட்களை இந்தியாவில் விற்கவேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைகள் பேச்சுவார்த்தைக்கான முட்டுக்கட்டையாக அமைந்தன.
நாட்டின் தொழிலாளர் எண்ணிக்கையில் பெரும் பங்கு வகிக்கும் விவசாயம் மற்றும் பால் உற்பத்தித் துறைகளில் இத்தகைய இறக்குமதிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த கவலைகள் முக்கிய பிரச்னையாகக் கருதப்பட்டன.