
வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) இந்தியாவும் பிரிட்டனும் இன்று (ஜூலை 24) கையெழுத்திட்டன. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் ஆண்டுக்கு 34 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு முறை சுற்றுப்பயணமாக லண்டனுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பிரிட்டன் வணிகம் மற்றும் வர்த்தகத்திற்கான அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதைத் தொடர்ந்து ஸ்டார்மருடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, இந்த வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவிற்கும் பிரிட்டனுக்குமான பகிரப்பட்ட செழிப்புக்கான ஒரு வரைபடம் என்று வர்ணித்தார்.
`ஒருபுறம், இந்திய ஜவுளி, காலணிகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், கடல் உணவு மற்றும் பொறியியல் பொருள்களுக்கு பிரிட்டன் சந்தைக்கான அணுகல் கிடைக்கும். இந்தியாவின் விவசாய விளைபொருள்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத் தொழிலுக்கு இங்கிலாந்து சந்தையில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
இந்த ஒப்பந்தம் குறிப்பாக இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பயனளிக்கும்’ என்றார்.
மேலும், மருத்துவ சாதனங்கள், விண்வெளி உதிரி பாகங்கள் போன்ற பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட பொருட்களை இந்தியாவில் உள்ள மக்களும், தொழிற்சாலைகளும் மலிவு விலையில் அணுக முடியும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
கடந்த 2020-ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு பிரிட்டன் கையெழுத்திட்ட மிகப்பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் ஒரு வளர்ந்த நாடுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது இதுவே முதல்முறையாகும்.