
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது இன்று (ஆக. 27) முதல் 50% சுங்க வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால், அந்நாட்டிற்கான இந்திய ஜவுளி ஏற்றுமதி கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஜவுளித் துறைக்குக் கைகொடுக்கும் விதமாக இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட 40 நாடுகளைக் குறிவைத்து பிரத்யேக திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, போலந்து, கனடா, மெக்ஸிகோ, ரஷ்யா, பெல்ஜியம், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் இந்த பட்டியலில் அடக்கம்.
`இந்த 40 சந்தைகளுக்கான இலக்குகளை முன்வைத்து தரமான, நிலையான மற்றும் புதுமையான ஜவுளிப் பொருட்களின் நம்பகமான விநியோகஸ்தராக நிலைநிறுத்திக்கொள்ள இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்திய தொழில்துறைக்கும், இந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கும் இதில் முக்கியப் பங்கு உள்ளது’ என்று ஓர் அதிகாரி தெரிவித்ததாக எகனாமிஸ் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், `இந்த 40 நாடுகளும் இணைந்து, சுமார் 590 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான மதிப்புடைய ஜவுளி மற்றும் ஆடைகளை இறக்குமதி செய்கின்றன, இந்தியா தனது சந்தைக்கான பங்கை அதிகரிக்க பரந்துபட்ட வாய்ப்புகளை இது வழங்குகிறது, தற்போது சுமார் 5-6% ஆக மட்டுமே இது உள்ளது’ என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
ஜவுளி, ரத்தினக் கற்கள், நகைகள், இறால், கம்பளங்கள் மற்றும் ஃபர்னிச்சர்கள் அமெரிக்க வரி விதிப்பால் பாதிப்பை சந்தித்துள்ளன.