
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 59 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
முதல் முறையாக இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 704 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ. 59.23 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள தகவல்படி கடந்த செப்.27-ல் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 704.885 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
உலகளவில் கச்சா எண்ணெயின் விலையில் பெரிய அளவில் மாற்றமின்றி ஸ்திரத்தன்மையுடன் நிலவுவதாலும், இந்திய நிறுவனங்களின் பங்குகளிலும், பாண்டுகளிலும் வெளிநாடுகளிலிருந்து முதலீடுகள் அதிகரித்துள்ளதாலும் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு முதல்முறையாக 700 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது.
இதன்மூலம் 700 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான அந்நிய செலாவணியை கையிருப்பில் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தப் பட்டியலின் முதல் இடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் ஜப்பானும், மூன்றாவது இடத்தில் சுவிட்ஸர்லாந்தும் உள்ளன.
மேலும் மார்ச் 2026-ல் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 745 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிதி நிறுவனமான போஃபா மதிப்பிட்டுள்ளது. கடந்த 2003-ல் முதல்முறையாக இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியது.