
ஜப்பானை பின்னுக்குத் தள்ளி பொருளாதார ரீதியில் உலகின் 4-வது பெரிய நாடு என்கிற அந்தஸ்தை இந்தியா எட்டியுள்ளதாக நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் நேற்று (மே 24) தகவல் தெரிவித்துள்ளார்.
தலைநகர் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நிதி ஆயோக் அமைப்பின் 10-வது நிர்வாக குழு கூட்டம் நேற்று (மே 24) நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்டனர்.
நிர்வாக குழு கூட்டம் நிறைவடைந்த பிறகு, அது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்த நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியம், `நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாம் (உலகின்) நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ளோம். மேலும், நாம் நான்கு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உள்ளோம்’ என்றார்.
சாதகமான புவிசார் அரசியல் சூழலும், பொருளாதார நிலைமைகளும்தான் இந்தியாவின் இத்தகைய வளர்ச்சிக்குக் காரணம் என்று சுப்ரமணியம் விளக்கமளித்தார். அத்துடன், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியா மூன்றாவது இடத்திற்கு உயரக்கூடும் என்றும் அவர் கணித்துள்ளார்.
ஐ.எம்.எஃப். எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி சுப்ரமணியம் மேலும் பேசியதாவது, `(தற்போது) அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே இந்தியாவைவிடப் பெரிய பொருளாதாரங்களாக உள்ளன, திட்டமிடப்பட்டவற்றில் நாம் உறுதியாக இருந்தால், 2.5 முதல் 3 ஆண்டுகளில் நாம் (உலகின்) மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருப்போம்’ என்றார்.