பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க ஐ.எம்.எஃப். ஒப்புதல்: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா!

பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க ஐ.எம்.எஃப். ஒப்புதல்: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா!

பாகிஸ்தானுக்கு கடனுதவி வழங்கும் ஐ.எம்.எஃப்.பின் முடிவை ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா கடுமையாக விமர்சித்துள்ளார்.
Published on

பொருளாதார சிக்கல்களை சமாளிப்பதற்கு ஏதுவாக, பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டாலர் கடனுதவியை உடனடியாக வழங்க, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்.) ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ள பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எஃப். கடனுதவி வழங்குவதை இந்தியா எதிர்த்து வந்தது. குறிப்பாக, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் காரணத்திற்காக அந்நாட்டிற்கு கடனுதவி வழங்க இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது.

மேலும், தொடர்ச்சியாக வழங்கப்படும் கடனுதவி, பாகிஸ்தானின் கடன் சுமையை கணிசமான அளவு உயர்த்தியுள்ளதாகவும், ஐ.எம்.எஃப்.பின் மிகப்பெரிய கடனாளியாக அந்நாட்டை மாற்றியுள்ளதாகவும் இந்தியா குற்றம்சாட்டியது.

இதன் அடிப்படையில், பாகிஸ்தானுக்கு கடனுதவி வழங்க ஐ.எம்.எஃப்.பில் நேற்று (மே 9) நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. எனினும், பாகிஸ்தானுக்கு சுமார் 1 பில்லியன் டாலர் கடன் வழங்கும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஐ.எம்.எஃப்.பில் நிறைவேறியது.

பாகிஸ்தானுக்கான இந்த கடனுதவி, காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெடுப்புகளையும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளையும் ஆதரிக்கும் நோக்கம் கொண்டவை என்று ஐ.எம்.எஃப். சார்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

`சவாலான சூழலையும் மீறி, பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில் முக்கியமான முன்னேற்றத்தை பாகிஸ்தான் அடைந்துள்ளது’ என்று ஐ.எம்.எஃப்.பின் துணை மேலாண் இயக்குநர் நிகெல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 2025-ல் 0.3 சதவீதமாக பாகிஸ்தானில் பணவீக்கம் குறைந்துள்ளதாகவும், ஆகஸ்ட் 2024-ல் 9.4 பில்லியன் டாலராக இருந்த அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, ஏப்ரல் மாத இறுதியில் 10.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாகவும் ஐ.எம்.எஃப். தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே பாகிஸ்தானுக்கு கடனுதவி வழங்கும் ஐ.எம்.எஃப்.பின் முடிவை, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா கடுமையாக விமர்சித்துள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in