
ஐசிஐசிஐ வங்கியில் ரூ. 50 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகை ரூ. 15 ஆயிரமாகக் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் கடந்த வாரம் அறிவிப்பொன்று வெளியானது. இதன்படி, ஆகஸ்ட் 1 அல்லது அதற்குப் பிறகு வங்கிக் கணக்கைத் தொடங்கியவர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையில் மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வங்கிக் கிளைகளில் கணக்கு வைத்திருந்தால், குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையாக ரூ. 50 ஆயிரம் பராமரிக்கப்பட வேண்டும். இது ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
சிறு நகரங்களில் ரூ. 5 ஆயிரமாக இருந்த குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகை ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. கிராமப்புறங்களில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகை ரூ. 2,500-ல் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இந்தியாவிலுள்ள உள்நாட்டு வங்கிகளில் குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையில் ஐசிஐசிஐ வங்கி நிர்ணயித்த இந்தத் தொகையே அதிகமாக இருந்தது. இதற்குக் கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்தன.
எனினும், ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா ஆகஸ்ட் 12 அன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "குறைந்தபட்ச இருப்புத் தொகையை முடிவு செய்யும் பொறுப்பை வங்கிகள் வசம் ரிசர்வ் வங்கி ஒப்படைத்துள்ளது. ஒவ்வொரு வங்கியும் அதன் குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயித்துள்ளன. இது ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை வரம்பின் கீழ் இல்லை" என்றார்.
இந்நிலையில், குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையை ஐசிஐசிஐ வங்கி ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 15 ஆயிரமாகக் குறைத்துள்ளது.
மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் - ரூ. 15,000 (குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகை)
சிறுநகரங்களில் - ரூ. 7,500
கிராமப்புறங்களில் - ரூ. 2,500
ஆகஸ்ட் 1-க்கு பிறகு கணக்கு தொடங்கியவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ICICI Bank | Minimum Account Balance |