
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி விகிதம் 2 அடுக்குகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. சிறப்பு அடுக்காக 40% என ஓர் அடுக்கு முன்மொழியப்பட்டுள்ளது. எனவே, பெரும்பாலான பொருள்கள் 18 சதவீதம் முதல் 5 சதவீதத்துக்குள் வருகிறது. இதன் காரணமாக பல்வேறு அன்றாடப் பொருள்களின் விலை குறையவுள்ளன.
கார், பைக் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டியும் குறைக்கப்பட்டுள்ளதால், இவற்றின் விலையும் குறைகிறது. ஆனால், குறிப்பிட்ட சில வகையைச் சேர்ந்த வாகனங்களின் விலை மட்டுமே குறைகிறது.
எந்தெந்த வாகனங்களின் விலை குறைகின்றன?
சிறிய ரக கார்களுக்கான ஜிஎஸ்டி முன்பு 28% ஆக இருந்தது. ஆனால், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய சீர்திருத்தம் மூலம் இவற்றுக்கான ஜிஎஸ்டி 18% ஆகக் குறைந்துள்ளன. இதன்மூலம், உதாரணத்துக்கு ஸ்விஃப்ட் மற்றும் டிஸைர் விலை 60 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
ஆல்டோ, அமேஸ், ஸ்விஃப்ட், டிஸைர், நெக்ஸான், வென்யூ உள்ளிட்ட கார்கள் சிறிய ரக கார்கள் எனும் வரம்புக்குள் வரும்.
350 சிசி-க்கும் குறைவான பைக் விலை குறைகிறது
350 சிசி-க்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளின் ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைந்துள்ளன. இதன்மூலம் ஹீரோ ஸ்ப்லென்டர், பஜாஜ் பிளாடினா, புல்லட் 350 போன்ற பைக்குகளின் விலை சற்று குறைகின்றன.
350 சிசி-க்கும் அதிகமான பைக் விலை அதிகரிக்கிறது
350 சிசி-க்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளின் ஜிஎஸ்டி 28%-ல் இருந்தது. கூடுதலாக செஸ் வரி 3 சதவீதம் இருந்தது. தற்போது செஸ் வரி நீக்கப்பட்டுள்ளது. 28% ஆக இருந்த ஜிஎஸ்டி இவற்றுக்கு 40% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டியில் மாற்றம் என்ன?
மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி தொடர்ந்து 5 சதவீதத்தில் நீடிக்கிறது.
பேருந்து, ஆட்டோ, ஆம்புலன்ஸ் வாகனம் குறைகிறது
லாரிகள், பேருந்துகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 10 சதவீதம் குறைந்துள்ளது. புதிய சீர்திருத்தம் மூலம் 28%-ல் இருந்து 18% ஆகக் குறைந்துள்ளன.
ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள்
ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி, முன்பு வெவ்வேறு அடுக்குகளில் இருந்தன. தற்போது இவை அனைத்தும் ஒரே அடுக்காக 18 சதவீதத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
GST | GST Council | GST Rationalisation | Nirmala Sitharaman | Small Cars | Bike | Auto Spare Parts