
கடந்த நிதியாண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டு அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் 8.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக ஜிஎஸ்டி வரி வசூல் உயர வாய்ப்புள்ளது.
கடந்த அக்டோபர் 2023-ல் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 1.72 லட்சம் கோடியாக இருந்தது, நடப்பாண்டில் இது 8.9 சதவீதமாக அதிகரித்து, 2024 அக்டோபரில் ரூ. 1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதிலும், நடப்பு நிதியாண்டின் (2024-2055) ஏப்ரல் மாதத்தில் மட்டும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 2.10 லட்சம் கோடியாக இருந்தது ஜிஎஸ்டி வரி வசூல்.
இன்று (நவ.1) மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மத்திய, மாநில, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரிகளின் வசூல் வருடா வருடம் அதிகரித்து வருகிறது.
நடப்பு நிதியாண்டின் (2024-2025) ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ரூ. 12.72 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. இதே காலகட்டத்திலான கடந்த நிதியாண்டை (2023-2024) ஒப்பிடும்போது இது 9.4 சதவீதம் அதிகமாகும் (ரூ. 11.64 லட்சம் கோடி). மேலும் 2022-2034 நிதியாண்டை ஒப்பிடும்போது 2023-2024 நிதியாண்டில் 11.7 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளது.
இந்திய பொருளாதாரத்தில் நிலவும் சாதகமாக சூழ்நிலையை சமீப காலமாக அதிகரித்து வரும் ஜிஎஸ்டி வரி வசூல் உணர்த்துகிறது. உலகளவில் பொருளாதார மந்த நிலை நிலவினாலும், இந்தியாவில் அதன் தாக்கம் குறைவாக உள்ளதையே இது எடுத்துக்காட்டுகிறது.