அட்சய திருதியை: நாடு முழுவதும் தங்கம் விற்பனையின் நிலவரம் என்ன?
ANI

அட்சய திருதியை: நாடு முழுவதும் தங்கம் விற்பனையின் நிலவரம் என்ன?

தங்கம் விற்பனை நள்ளிரவு வரை நீடித்தது.
Published on

தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டிய நிலையிலும், அட்சய திருதியை நாளன்று கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தங்க விற்பனை அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு 3-வது நாளில் நிகழும் வளர்பிறை திதி, அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை இந்திய மக்களிடையே உள்ளது. இதனால் அட்சய திருதியை நாளன்று நகைக் கடைகளில் விற்பனை களைகட்டும்.

எனினும் கடந்த ஆண்டு முதலே ஆபரணத் தங்கத்தின் விலை முன்பு எப்போதும் இல்லாத விதமாக ஏற்றம் கண்டு வருகிறது. அதிலும் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 72 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியது.

கடந்தாண்டு அட்சய திருதியை நாளன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 53,280 விற்ற நிலையில், நேற்றைய (ஏப்.30) அட்சய திருதியை நாளன்று ஒரு சவரன் விலை ரூ. 71,840-க்கு விற்றது. அதிகரித்துள்ள தங்க விலையால் விற்பனையில் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட தகவலின்படி, நாடு முழுவதும் நேற்று சுமார் ரூ. 12 ஆயிரம் கோடிக்கு தங்க நகைகள் மற்றும் பொருட்கள் விற்பனையானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தங்கம் விற்பனை 20% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று (ஏப்.30) மாலை 6.45 மணி அளவில் அட்சய திருதியை திதி முடிவுக்கு வந்தாலும், தங்க விற்பனை நள்ளிரவு வரை நீடித்தது.

logo
Kizhakku News
kizhakkunews.in