
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஜூலை 23) சவரனுக்கு ரூ. 75,000-ஐ கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகள் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
இவற்றின் அடிப்படையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்நிலையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 95 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 9,380-க்கும், சவரனுக்கு ரூ. 760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 75,040-க்கும் இன்று (ஜூலை 23) விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம் கடந்தாண்டு முதலே அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இன்று முதல்முறையாக ரூ. 75,000-ஐ கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த வாரம் புதன்கிழமை (ஜூலை 16) அன்று ரூ. 72,800 ஆக இருந்த 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார புதன்கிழமை (ஜூலை 23) ரூ. 75,040 ஆக உயர்ந்துள்ளது. ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,240 அதிகரித்துள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சர்வதேச அளவிலான பொருளாதார நிலையற்ற தன்மை காரணத்தால் பாதுகாப்பான முதலீடு என்ற கண்ணோட்டத்தில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாகவும், இதனால் தங்கத்தின் தேவை உயர்ந்து அதன் விலையும் அதிகரித்துள்ளது.