
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்பு, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம், சர்வதேச பொருளாதார நெருக்கடி போன்ற காரணிகளால் சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தின் கொள்முதலை அதிகரித்துள்ளதாலும், ரியல் எஸ்டேட் போன்ற துறைகள் இறக்கத்தைச் சந்தித்திருப்பதால், பாதுகாப்பான முதலீடு என்பதைக் கருத்தில் கொண்டு இந்திய மக்கள் பலரும் தங்கம் வாங்குவதை அதிகரித்துள்ளதாலும், இதுவரை இல்லாத அளவிற்கு தங்கத்தில் விலை வரலாறு காணாத புதிய உச்சங்களை எட்டி வருகிறது.
மத்திய பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் நேற்று (பிப்.3) கிராமிற்கு ரூ. 85 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,705 ஆக விற்பனையானது, சவரனுக்கு ரூ. 680 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 61,640 ஆக விற்பனையானது.
இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று (பிப்.4) உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று கிராமிற்கு ரூ. 105 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,810 ஆக விற்பனையாகிறது. அத்துடன் சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ. 62,480 ஆக விற்பனையாகிறது.