
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (பிப்.11) சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ. 64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான சுங்க வரி, உள்நாட்டுத் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பிற நாடுகள் மீது மேற்கொண்ட வரி விதிப்புகள் உள்ளிட்ட பொருளாதார கெடுபிடிகளால், தங்கத்தின் மீதான முதலீடு சர்வதேச அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
கடந்த ஜன.22-ல் சென்னையில் ஒரு சவரம் தங்கத்தின் விலை ரூ. 60 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. அதன்பிறகு, தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தாலும், ஜன.31-ல் ஒரு சவரன் ஆபணத்தங்கத்தின் விலை ரூ. 61 ஆயிரத்தையும், பிப்.1-ல் ரூ. 62 ஆயிரத்தையும் தாண்டியது. இதன் தொடர்ச்சியாக, தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 8,060-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து, ஒரு சவரம் தங்கம் ரூ. 64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.