

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தைத் தாண்டி வரலாறு காணாத அளவுக்குப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அண்மை நாள்களாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 90 ஆயிரத்தைக் கடக்கத் தொடங்கியதும் தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாகவே ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தைத் தொட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தீபாவளிக்கு முன்பு ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தைத் தொடவில்லை. தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகும் தங்கத்தின் விலை சற்று குறையத் தொடங்கியது. பிறகு, டிசம்பரிலிருந்து மீண்டும் படிப்படியாக விலை உயரத் தொடங்கியது.
இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு கண்டு ரூ. 99,680-க்கு விற்பனையாகி ரூ. 1 லட்சத்தை நெருங்கியது. இந்நிலையில், தற்போது ஒரே நாளில் இரண்டாவது முறையாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 440 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மொத்தம் ரூ. 1,160 அளவுக்கு விலை உயர்ந்ததன் மூலம், புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ. 1,00,120-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 145 உயர்ந்து ரூ. 12,505-க்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளியின் விலை காலை கிலோவுக்கு ரூ. 3,000 உயர்ந்த நிலையில், தற்போது மேலும் ரூ. 2,000 விலை உயர்ந்துள்ளது. இதன்மூலம், ஒரு கிலோ வெள்ளி தற்போது ரூ. 2,15,000-க்கு விற்பனையாகிறது.
உலக நாடுகள் தங்கத்தை வாங்கிக் குவிப்பது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குப் பெரும் சரிவைச் சந்திக்க இது முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. தங்கத்தின் விலையிலும் இது எதிரொலித்துள்ளது.
Gold Price | Gold Rate | Gold Price Hike | Gold | Silver | Silver Price | Silver Rate | 1 Lakh | Gold 1 Lakh |