
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தனிநபருக்கு நகைக்கடன் வழங்குவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய விதிகளைக் கொண்டு வருகிறது. வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் நகைக்கடன்களில் பொதுவான விதிகளைக் கொண்டு வரும் நோக்கில் வரைவு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆர்பிஐ-யின் வரைவு வழிகாட்டுதல்கள்
தங்க நகைக்கடன் பெற்றால், நகையின் மதிப்பிலிருந்து 75 சதவீதம் மட்டுமே கடனாகக் கொடுக்கப்படும். உதாரணத்துக்கு ரூ. 10,000 மதிப்புடைய நகைக்கு ரூ. 7,500 வரை மட்டுமே கடன் வழங்கப்படும்.
நகைக்கடன் பெறுபவர்கள், நகை தன்னுடையது என்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். நகை வாங்கியதற்கான அசல் ரசீதுகள் இல்லாதபட்சத்தில் கடன் பெறுபவர்களிடமிருந்து உரிய ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கடன் வழங்குபவர் மற்றும் கடன் பெறுபவர் இடையே தெளிவு கிடைக்க, கடன் வழங்குபவர்கள் நகையின் தூய்மைத்தன்மை குறித்த சான்றிதழை வழங்க வேண்டும். கடன் பெறுபவர்கள் இதைக் கட்டாயம் பெற வேண்டும்.
தங்க நகைகள் மற்றும் குறிப்பிட்ட சில தங்கக் காசுகளுக்கு மட்டுமே கடன்கள் வழங்கப்படும். தங்கம் வேறு வடிவில் இருந்தால், அதற்குக் கடன் வழங்கப்படாது.
குறிப்பிட்ட நிபந்தனையுடன், தகுதியுடைய வெள்ளிப் பொருள்களை அடகு வைத்தும் கடன் பெறலாம்.
தனிநபர் ஒருவருக்கு ஒரு கிலோவுக்கும் குறைவான எடை உடைய நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.
அடகு வைக்கப்படும் நகைகள், 22 கேரட் தங்க விலையின் அடிப்படையில் மதிப்பிடப்படும்.
கடன் ஒப்பந்தத்தில் முழு விவரங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
முழுத் தொகையும் செலுத்திய பிறகு 7 வேலை நாள்களுக்குள் தங்கத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். தாமதம் ஏற்பட்டால், கடன் வழங்கியவர் நாளொன்றுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதமாகக் கொடுக்க வேண்டும்.