
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக மூன்று ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று (ஆக. 29) அறிவித்துள்ளது. இதனால், கே. சுப்பிரமணியனை தொடர்ந்து புதிய நிர்வாக இயக்குநராக அவர் பதவியேற்கவுள்ளார்.
இந்தியாவுடன் வங்கதேசம், பூட்டான், இலங்கை ஆகிய அண்டை நாடுகளையும் சர்வதேச நாணய நிதியத்தில் அவர் பிரதிநிதித்துவப்படுத்துவார்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் இளங்கலை., ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில். பட்டம் மற்றும் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் ஆகியவற்றை முடித்த பிறகு, 1990-களின் முற்பகுதியில் இந்தியா சார்பாக சர்வதேச நாணய நிதியத்தில் படேல் பணியாற்றினார்.
அது பொருளாதார தாராளமயமாக்கல் காலகட்டம் என்பதால் நிதிக் கொள்கை மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களில் அவர் கவனம் செலுத்தினார்.
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (AIIB) முதலீட்டு நடவடிக்கைகளுக்கான துணைத் தலைவராகப் பணியாற்றியுள்ள உர்ஜித் படேல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனம் (IDFC) ஆகியவற்றில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
மேலும், தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் தலைவராகவும், ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தின் மூத்த உறுப்பினராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
ரகுராம் ராஜனுக்குப் பிறகு, செப்டம்பர் 2016-ல் இந்திய ரிசர்வ் வங்கியின் 24-வது ஆளுநராக படேல் நியமிக்கப்பட்டார்.
ரிசர்வ் வங்கியின் சுயாட்சி ஆதிகாரம் மற்றும் உபரி இருப்புக்கள் தொடர்பாக மத்திய அரசுடன் பிணக்கு ஏற்பட்டதால், தனிப்பட்ட காரணங்களை குறிப்பிட்டு டிசம்பர் 2018-ல் ஆளுநர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.