
மாநிலங்களுக்காக மத்திய அரசால் செயல்படுத்தப்படும் வட்டியில்லா நிதி உதவித் திட்டத்தில் இருந்து தில்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட நிதிப்பற்றக்குறையை ஈடுசெய்வதற்காக, `மூலதன முதலீட்டிற்கான சிறப்பு உதவித் திட்டத்தை’ மத்திய அரசு செயல்படுத்தியது. இதன் கீழ், மாநிலங்களால் செயல்படுத்தப்படும் மூலதன முதலீட்டுத் திட்டங்களுக்கான (capital investment projects) நிதியை 50 வருடங்களுக்கு வட்டியில்லாமல் மத்திய அரசு வழங்கியது.
தற்போது, இந்த நிதியுதவி திட்டத்தின் கீழ் யூனியன் பிரதேச அரசுகளையும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சட்டப்பேரவைகளுடன் கூட யூனியன் பிரதேசங்களான தில்லி, புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மூன்றும் இதில் இணைக்கப்படவுள்ளன.
சாலைகள், மேம்பாலங்கள், மருத்துவமனைக் கட்டடங்கள், சுற்றுலாத் துறை சார்ந்த திட்டங்கள் போன்றவற்றுக்காக இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறலாம். பிற இரு யூனியன் பிரதேசங்களை ஒப்பிடும்போது, இந்த திட்டத்தின் கீழ் தில்லி அதிக பலனடையும் என்று கூறப்படுகிறது.
புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தில்லி பாஜக அரசு நடப்பு நிதியாண்டிற்காக ரூ. 1 லட்சம் கோடி மதிப்பீட்டிலான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது. தில்லிக்கான பல்வேறு புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் இதில் அறிவிக்கப்பட்டன.
தில்லி அரசின் தனிப்பட்ட வருவாயை ஒப்பிடும்போது, இந்த தொகை மிகவும் அதிகமாகும். எனவே மத்திய அரசின் வட்டியில்லா நிதி உதவி திட்டத்தின் வழியாக நிதியுதவி பெற்று பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த தில்லி அரசால் முடியும் என்று கூறப்படுகிறது.
அதேநேரம், புதிய திட்டங்களுக்கான நிதியுதவியைப் பெறுவதற்கான நிதி வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டு, ஏற்கனவே அமலில் உள்ளன.