சீரற்ற வரி விதிப்பால் வங்கிகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் குறைந்துள்ளன: எஸ்பிஐ

இதனால் வங்கிகளில் முதலீடு செய்வதை விட, அதிக முதிர்வுத் தொகையைத் தரும் திட்டங்களையே வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்
சீரற்ற வரி விதிப்பால் வங்கிகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் குறைந்துள்ளன: எஸ்பிஐ
1 min read

முதலீடுகள் மீது விதிக்கப்படும் சீரற்ற வரிகளால் வங்கிக் கணக்குகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் சமீப காலமாக குறைந்துள்ளதாக எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே கால அளவிலான வெவ்வேறு விதமான முதலீட்டுத் திட்டங்கள் மூலம் திரும்பக் கிடைக்கும் முதிர்வுத் தொகைகள் மீது விதிக்கப்படும் வெவ்வேறு விதமான வரிகளால் வங்கி முதலீடுகள் குறைந்துள்ளன என்று எஸ்பிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எஸ்பிஐ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை:

`ரூ. 10 லட்சத்தை ஒரு ஆண்டு காலத்துக்கு சேமிப்பு வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக வைத்திருக்கும்போது, 3 சதவீத வட்டிக்கு ரூ. 30,000 கிடைக்கும். ஆனால் இந்த ரூ. 30,000 மீது வரி பிடித்தங்கள் போக ரூ. 16,000 மட்டுமே வாடிக்கையாளருக்குத் திரும்பக் கிடைக்கும்.

இதுவே ஒரு ஆண்டு காலத்துக்கான டெர்ம் டெபாசிட்டில், ரூ. 10 லட்சத்துக்கு வரி பிடித்தங்கள் போக ரூ. 50,000 வாடிக்கையாளருக்குக் கிடைக்கும். இதே போல ரூ. 10 லட்சத்தை ஈக்விட்டி மற்றும் மியூட்சுவல் பண்டில் ஒரு வருடத்துக்கு முதலீடு செய்தால் வரி பிடித்தங்கள் போக ரூ. 88,000 கிடைக்கும்.

டெர்ம் டெபாசிட், குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களான லிக்விட் ஃபண்ட், பாண்ட் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மீது திரும்பக் கிடைக்கும் முதிர்வுத் தொகைகள் வெவ்வேறாக இருக்கின்றன. மேலும் இதன் மீது விதிக்கப்படும் வரிகளும் சீரற்ற முறையில் உள்ளன.

இந்த வேறுபாடுகள் மற்றும் வரி விதிப்புகளால் சிக்கல் உருவாகியுள்ளது. இதனால் வங்கிகளில் முதலீடு செய்வதை விட, அதிக முதிர்வுத் தொகையைத் தரும் திட்டங்களையே வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். இதனால் வங்கி முதலீடுகள் குறைந்து வருகின்றன’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in