மாநிலங்களுக்கான வரிப்பகிர்வைக் குறைக்க 16-வது நிதி ஆணையத்திற்கு மத்திய அரசு பரிந்துரை?
ANI

மாநிலங்களுக்கான வரிப்பகிர்வைக் குறைக்க 16-வது நிதி ஆணையத்திற்கு மத்திய அரசு பரிந்துரை?

வரிப்பகிர்வை 41 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரிக்கக்கோரி 21 மாநிலங்கள் சார்பில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Published on

மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 41 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைக்குமாறு 16-வது நிதி ஆணையத்திடம் மத்திய அரசு பரிந்துரைத்து வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான வரிப்பகிர்வின் விகிதாச்சாரத்தை நிர்ணயிக்கும் வகையில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மத்திய நிதி ஆணையம் அமைக்கப்படும்.

அந்த வகையில், 1 ஏப்ரல் 2026-ல் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளுக்கான வரிப்பகிர்வு பரிந்துரையை வழங்க அரவிந்த் பனகாரியா தலைமையில் 16-வது மத்திய நிதி ஆணையம் கடந்தாண்டு டிசம்பரில் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சௌமியாகாந்தி கோஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளார்கள்.

நிதிப்பகிர்வு தொடர்பாக ஒவ்வொரு மாநிலமாகப் பயணித்து, மாநில அரசுகளின் ஆலோசனைகளை கேட்டு, பரிந்துரைகளைப் பெற்றுவருகின்றனர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதி ஆணைய குழுவினர்.

தற்போது, 15-வது நிதி ஆணையம் வழங்கிய பரிந்துரைகளின்படி மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதம் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மார்ச் 2026 வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும்.

இந்நிலையில், ஏப்ரல் 2026 தொடங்கி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த வரிப்பகிர்வை 40 சதவீதமாக குறைக்குமாறு மத்திய அரசு பரிந்துரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், வரிப்பகிர்வை 41 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரிக்கக்கோரி 21 மாநிலங்கள் சார்பில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கேரள அரசு நடத்திய மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டில் தமிழகம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் வரிப்பகிர்வில் மாநிலங்களுக்கு அதிக பங்கை மத்திய அரசு வழங்கவேண்டும் என்கிற கோரிக்கை முன்வைத்திருந்தார்கள்.

வரும் 31 அக்டோபருக்குள் வரிப்பகிர்வுக்கான இறுதி பரிந்துரையை 16-வது நிதி ஆணையம் மத்திய அரசிடம் வழங்கும் என்று கூறப்படுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in