இந்திய மக்களின் தனிநபர் கடன் சராசரி ரூ. 4.8 லட்சமாக உயர்வு: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

நிபுணர்களின் உதவியை நாடுவதன் வழியாகவும், தரவுகளை திருத்துவதன் மூலமாகவும் உண்மையான குறைபாடுகளை மறைக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இந்திய மக்களின் தனிநபர் கடன் சராசரி ரூ. 4.8 லட்சமாக உயர்வு: காங்கிரஸ் குற்றச்சாட்டு!
ANI
1 min read

இந்திய மக்களின் தனிநபர் கடன் சராசரி கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 3.9 லட்சத்தில் இருந்து ரூ. 4.8 லட்சமாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையை முன்வைத்து மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ வங்கி அண்மையில் வெளியிட்ட நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில், கடந்த மார்ச் 2023-ல் ரூ. 3.9 லட்சமாக இருந்த இந்திய மக்களின் தனிநபர் கடன் சராசரி, மார்ச் 2025-ல் ரூ. 4.8 லட்சமாக உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் (தகவல் தொடர்பு) ஜெய்ராம் ரமேஷ் இன்று (ஜூலை 2) வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,

`கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மோடி அரசாங்கம் சிதைத்துள்ளது. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை; அனைத்து கொள்கைகளும் முதலாளித்துவ நண்பர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன, அதனால் ஏற்படும் இழப்புகளை நாட்டு மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர்.

இந்த உண்மை ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகையில் நம் முன் வந்து கொண்டிருக்கிறது. இந்திய பொருளாதாரம் குறித்த கவலையளிக்கும் உண்மையை ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நிபுணர்களின் உதவியை நாடுவதன் வழியாகவும், தரவுகளை திருத்துவதன் மூலமாகவும் உண்மையான குறைபாடுகளை மறைக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. எனினும், மோடி ஆட்சியில் கடன் சுமை உச்சத்தில் உள்ளது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.

1) கடந்த 2 ஆண்டுகளில் தனிநபர் கடன் ரூ. 90,000 அதிகரித்து ரூ. 4.8 லட்சமாக உயர்ந்துள்ளது.

2) 25.7% வருமானம் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக மட்டுமே செலவிடப்படுகிறது.

3) அதிகபட்சமாக 55% கடன்கள் கிரெடிட் கார்டுகள், மொபைல் இ.எம்.ஐ.கள் போன்றவற்றுக்குச் செல்கின்றன, அதாவது இந்த பணவீக்கத்தால், தங்கள் வருமானத்தில் வாழ முடியாமல் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் குடும்பங்கள் உள்ளன.

4) பாதுகாப்பற்ற கடன்கள் 25%-ஐ தாண்டிவிட்டன.

இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மார்ச் 2025 நிலவரப்படி, பிற நாடுகளுக்கு இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் 736.3 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 10% அதிகமாகும்.

நாட்டில், இளைஞர்களுக்கு வேலையில்லை, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள், பணவீக்கத்தால் மக்கள் சிரமப்படுகிறார்கள் மற்றும் அரசியலமைப்பு அமைப்புகள் நசுக்கப்படுகின்றன.

கடன்களால் மக்கள் மூழ்கி வருகின்றனர். ஆனால், மோடியின் நெருங்கிய நண்பர்கள் லாபம் ஈட்டுகிறார்கள், அவர்களின் செல்வம் அதிகரித்து வருகிறது.

நேரடியான கேள்வி என்னவென்றால்: அனைத்து அரசு திட்டங்களும் பொது-தனியார் கூட்டு அல்லது தனியார் பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்படும்போது, எதனால் ​​நாட்டின் கடன் சுமை அதிகரிக்கிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ரூ. 4,80,000 கடனில் இருப்பது ஏன்?’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in