முதல்முறையாக கடன் வாங்குபவர்களுக்கு சிபில் ஸ்கோர் தேவையில்லை: நிதி அமைச்சகம் | CIBIL Score

கடன்களுக்கான குறைந்தபட்ச கடன் மதிப்பெண் தேவையை இந்திய ரிசர்வ் வங்கி வகுக்கவில்லை.
முதல்முறையாக கடன் வாங்குபவர்களுக்கு சிபில் ஸ்கோர் தேவையில்லை: நிதி அமைச்சகம் | CIBIL Score
ANI
1 min read

கடன் வாங்குபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக, சிபில் ஸ்கோர் இல்லை என்பதற்காக முதல்முறையாக கடன் கோரி விண்ணப்பிப்பவர்களின் கடன் விண்ணப்பங்களை வங்கிகள் நிராகரிக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நடப்பு மழைக்கால கூட்டத்தொடரின்போது இது தொடர்பாக மக்களவையில் பேசிய மத்திய இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, கடன்களுக்கான குறைந்தபட்ச கடன் மதிப்பெண் தேவையை (minimum credit score requirement) இந்திய ரிசர்வ் வங்கி வகுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.

கடந்த 2025 ஜனவரி 6 அன்று வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து மக்களவையில் சௌத்ரி குறிப்பிடுகையில், `முதல்முறையாக கடன் வாங்குபவர்களின் கடன் விண்ணப்பங்களை கடன் வரலாறு இல்லை (no credit history) என்பதற்காக நிராகரிக்கக்கூடாது’ என்றார்.

புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை என்றாலும், வங்கிகள் பின்வரும் பிற வழிமுறைகளை பின்பற்றத் தடையில்லை:

(i) முன்னதாக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்திய தரவுகளை ஆய்வு செய்தல்,

(ii) தாமதமான அல்லது தவறவிட்ட கடன்களை அடையாளம் காணுதல்,

(iii) மறுசீரமைக்கப்பட்ட அல்லது தீர்க்கப்பட்ட கடன்களைச் சரிபார்த்தல் மற்றும்

(iv) ஏதேனும் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால் அவற்றை மதிப்பாய்வு செய்தல்.

கடன் அறிக்கையை பெறுவதற்கான செலவு

கடன் அறிக்கையை (Credit Report) அணுகுவதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் ரிசர்வ் வங்கியால் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை சௌத்ரி சுட்டிக்காட்டினார்.

இதன்படி கடன் தரவு நிறுவனங்கள் (Credit Information Companies) ஒரு தனிநபரின் சொந்த கடன் தகவலை வழங்குவதற்கு ரூ. 100 வரை வசூலிக்கலாம். இதற்கு மேல் வசூலிக்கப்படும் எந்தவொரு கட்டணமும் செல்லாததாகக் கருதப்படும்.

செப்டம்பர் 2016-ல் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு கடன் தரவு நிறுவனமும், அந்நிறுவனத்தில் கடன் வரலாறு உள்ள நபர்களுக்கு, வருடத்திற்கு ஒரு முறை மின்னணு வடிவத்தில், கிரெடிட் ஸ்கோர் உள்பட ஒரு இலவச முழு கடன் அறிக்கையை வழங்கவேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in