
சீனாவில் இருந்து அரிய வகை காந்தங்களை இறக்குமதி செய்யும் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சிக்கலை சந்தித்துள்ளதால், சில வாரங்களில் கடுமையான உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வாகன உதிரி பாகங்கள் உற்பத்திக்காக தங்கள் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த அரிய வகை காந்தங்களுக்கான அனுமதியை சீன அரசு மறுத்துவிட்ட தகவலை, பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரிகளும், தொழில்துறையைச் சேர்ந்தவர்களும் பகிர்ந்துகொண்டதாக எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு புகழ்பெற்ற உலகளாவிய வாகன உற்பத்தி நிறுவனத்தின் இந்தியப் பிரிவுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஏற்றுமதி கோரிக்கை சீன அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அந்த நிறுவனத்தின் ஜெர்மனி மற்றும் அமெரிக்க பிரிவுக்கு அரிய வகை காந்தங்களை ஏற்றுமதி செய்ய சீன அரசு அனுமதியளித்துள்ளது.
ஏழு அரிய வகை தனிமங்களுக்கான ஏற்றுமதி மீது சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கிய ஏப்ரல் 4-ம் தேதி முதல், இந்திய வாகன உதிரிபாக தயாரிப்பாளர்களுக்கான ஏற்றுமதி பொருள்கள் சீன துறைமுகங்களில் தேக்கமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் காந்தங்கள் போன்றவையும் அடக்கம்.
உலகில் மிகப்பெரிய அளவில் அரிய வகை தனிமங்களை உற்பத்தி செய்யும் நாடான சீனா, இந்த விநியோகச் சங்கிலியின் மீதான தனது ஆதிக்கத்தை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இதன் வெளிப்பாடாகவே போட்டி நாடுகளுக்கான தனிம ஏற்றுமதியை சீனா கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளது.
போர் விமானங்கள் முதல் மின்சார வாகனங்கள் மற்றும் ஸ்மார்ட் ஃபோன்கள் வரையிலான அனைத்தையும் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் அரிய வகை காந்தங்களின் விநியோகத்தை எளிதாக்குவது குறித்த பேச்சுவார்த்தையை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கடந்த ஜூன் 5 அன்று ஒப்புக்கொண்டனர்.