மத்திய அரசின் நேரடி வரி தீர்வுத் திட்டம் அக்.1 முதல் அமலுக்கு வருவதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை 23-ல் மோடி 3.0 அரசின் முதல் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார். தனது பட்ஜெட் உரையில், வரிகளை எளிமைப்படுத்தவும், வரி செலுத்துவோருக்கான சேவைகளை மேம்படுத்தவும், நிலையான வரிவிதிப்பை உறுதி செய்யவும், அரசுக்கான வருவாயை அதிகரிக்கவும், வரி தொடர்பான வழக்குகளைக் குறைக்கவும் மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி நேரடி வரி தீர்வுத் திட்டமான, `நேரடி வரி விவாத் சே விஸ்வாஸ் திட்டம்’ வரும் அக்.1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
தற்போது பல்வேறு நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள சுமார் ரூ. 35 லட்சம் கோடி மதிப்பிலான வருமான வரி, மூலதன ஆதாய வரி போன்ற நேரடி வரிகள் தொடர்பான வழக்குகள், இந்த `நேரடி வரி விவாத் சே விஸ்வாஸ் திட்டத்தின்’ கீழ் தீர்வு காணப்படும் எனத் தெரிகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், 22 ஜூலை 2024 வரை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், வருமான வரி மேல்முறையீடு தீர்ப்பாயம், ஆணையர்/இணை ஆணையர் (மேல்முறையீடு) அலுவலகங்கள் ஆகியவற்றில் வரி செலுத்துபவர்கள், வரி அலுவலகர்கள் தொடர்ந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்படும்.
நேரடி வரிகள் தொடர்பான வழக்குகளுக்கு தீர்வு காண, முதல்முறையாக 'விவாட் சே விஸ்வாஸ்' திட்டம் 2020-ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1 லட்சம் வரி செலுத்துவோர்கள் பயனடைந்தனர். இதன் மூலம் மத்திய அரசுக்கு சுமார் ரூ. 75,000 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்தது.