சிபில் ஸ்கோர் மோசமாக இருந்தால் வங்கிப் பணி நியமனம் ரத்து: எஸ்.பி.ஐ.

மோசமான நிதி ஒழுக்கம் கொண்ட ஒருவர் பொதுப் பணத்தைக் கையாள்வதில் நேர்மையாக நடந்துகொள்வார் என்று நம்பிக்கை வைக்கமுடியாது.
எஸ்.பி.ஐ. - கோப்புப்படம்
எஸ்.பி.ஐ. - கோப்புப்படம்ANI
1 min read

தனி நபரின் கடன் நிலையை குறிக்கும் சிபில் ஸ்கோர் மோசமாக இருந்ததால், ஒருவரின் வங்கிப் பணி நியமனத்தை ரத்து செய்து எஸ்.பி.ஐ. வங்கி பிறப்பித்த உத்தரவில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

மோசமான சிபில் ஸ்கோர் அறிக்கையின் அடிப்படையில், தனது பணி நியமனம் ரத்து செய்யப்பட்டதாக ஒருவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது.

வட்ட அடிப்படையிலான அதிகாரி (Circle Based Officer) பதவிக்கு விண்ணப்பித்து, அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்ததாகவும், தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்காணல், மருத்துவப் பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பிற ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றுக்குப் பிறகு 16 மார்ச் 2021 அன்று தனக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டதாகவும் அந்த நபர் மனுவில் கூறியிருந்தார்.

மேலும், தனது சிபில் அறிக்கை 12 மார்ச் 2021 அன்று எடுக்கப்பட்டு, 16 மார்ச் அன்று அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டதாகவும், அதன்பிறகு சிபில் அறிக்கை தொடர்பான விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு தன்னிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தனது விளக்கத்தைச் சமர்ப்பித்து, தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்குமாறு வங்கியிடம் கோரிய போதிலும், தனது நியமனத்தை ரத்து செய்து வங்கி உத்தரவை பிறப்பித்ததாக அவர் கூறினார்.

பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட தகுதி அளவுகோல்களின்படி, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் இருந்து தவறியதற்கான பதிவுகள், சிபில் மற்றும் பிற வெளி நிறுவனங்களின் பாதகமான அறிக்கைகளைக்கொண்ட தேர்வர்கள் வங்கிப் பணி நியமனத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று வங்கி சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

வழக்கு மீதான விசாரணையை மேற்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி என். மாலா, வங்கி ஊழியர்கள் பொதுப் பணத்தைக் கையாள்வதால், வங்கி வணிகத்திற்கு நிதி ஒழுக்கம் தேவை என்று குறிப்பிட்டார்.

மேலும், மோசமான நிதி ஒழுக்கம் கொண்ட ஒருவர் பொதுப் பணத்தைக் கையாள்வதில் நேர்மையாக நடந்துகொள்வார் என்று நம்பிக்கை வைக்கமுடியாது என்றும், மோசமான சிபில் ஸ்கோர் வைத்துள்ள நபர்கள் வங்கிப் பணி நியமனத்திற்குத் தகுதியற்றவர்கள் என எஸ்.பி.ஐ வங்கி கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in