நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் ஆப்பிள் நிறுவனம் மூலம் இந்தியாவில் 6 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
எகனாமிக் டைம்ஸில் வெளியான பிரத்யேக செய்தியின்படி, சீனாவில் மேற்கொள்ளப்படும் உற்பத்தியைப் பெரிதும் சார்ந்திருக்கும் ஆப்பிள் நிறுவனம் இதை இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் மற்றும் இதன் சப்ளையர் நிறுவனங்கள் அரசிடம் சமர்ப்பித்துள்ள தரவுகளின்படி, அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் இந்தியாவில் 2 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 70% பெண்களைப் பணியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி மூன்று தயாரிப்பு நிறுவனங்களான ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் (தற்போது டாடா எலக்ட்ரானிக்ஸ்) மற்றும் பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் மூலம் ஏற்கெனவே 80,872 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது. கூடுதலாக, மற்ற சப்ளையர்களான டாடா குழுமம், சல்கோம்ப், மதர்சன், ஃபாக்ஸ்லிங்க் (தமிழ்நாடு), சன்வோடா (உத்தரப் பிரதேசம்), ஏடிஎல் (ஹரியாணா), ஜபில் (மஹாராஷ்டிரம்) ஆகிய நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ஏறத்தாழ 84 நேரடி வேலைவாய்ப்புகளை ஏற்கெனவே ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நேரடி வேலைவாய்ப்பு மூன்று மறைமுக வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்று அரசு கணக்கிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன்மூலம், 5 லட்சம் முதல் 6 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
தமிழ்நாட்டில் ஒசூரிலுள்ள டாடா குழுமம் சார்பில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் முதல் இங்கு ஐஃபோன் உற்பத்தி தொடங்கப்படவுள்ளதாகவும், படிப்படியாக உற்பத்தி திறன் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.