
வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 47-வது சென்னைப் புத்தகக் காட்சி நாளை முதல் தொடங்குகிறது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மாலை 4.30 மணியளவில் நடைபெறும் தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். 2024-ம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி சங்க விருதுகளை வழங்கி முதல்வர் உரையாற்றுகிறார்.
நாளை தொடங்கும் புத்தகக் காட்சி, ஜனவரி 21 வரை நடைபெறவுள்ளது. ஏறத்தாழ 1000 கடைகள் இடம்பெறவுள்ளன. புத்தகக் காட்சி விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் வேலை நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது.