பாகிஸ்தானின் பதிலடித் தாக்குதலில் ஈரானில் 9 பேர் பலி

ஈரான் மீது பாகிஸ்தான் நடத்திய பதிலடித் தாக்குதலில் அந்நாட்டில் 9 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்ANI

ஈரான் மீது பாகிஸ்தான் நடத்திய பதிலடித் தாக்குதலில் அந்நாட்டில் 9 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் - ஈரான் எல்லையில் பலுசிஸ்தான் பகுதியில் சன்னி தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் அல் அத்ல் முகாம் மீது ஈரான் ராணுவம் இரு ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதில் இரு குழந்தைகள் உயிரிழந்தார்கள். 3 பேருக்குக் காயம் ஏற்பட்டது. 24 மணி நேரத்தில் பாகிஸ்தான், ஈராக், சிரியா ஆகிய நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈராக், சிரியா மீது தாக்குதல் நடத்திய அடுத்த நாள் பாகிஸ்தான் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. சன்னி தீவிரவாத அமைப்புகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாகவும் ஈரானுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவதாலும் ஈரான் இந்நடவடிக்கையை மேற்கொண்டது.

பாகிஸ்தானும் ஈரானும் 959 கி.மீ. தூரத்துக்கு எல்லையைப் பகிர்ந்துள்ளன. எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடைபெற்றது. ஜெய்ஷ் அல் அத்ல் தீவிரவாத அமைப்பு, ஈரான் காவலர்களைக் கடந்த காலங்களில் கடத்தியுள்ளதாகத் தகவல் வெளியானது. ஜெய்ஷ் அல் அத்ல் அமைப்புக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் துணைபோவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

எங்கள் வான்வெளியில் அத்துமீறி நுழைந்து நாட்டிற்குள் தாக்குதல் நடத்துவதை நாங்கள் கண்டிக்கிறோம் என்று பாகிஸ்தான் எச்சரித்தது. இதனால் ஆணு ஆயுதங்களைக் கொண்ட பாகிஸ்தான் - ஈரான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரானின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தானின் பதிலடித் தாக்குதலில் ஈரானில் 9 பேர் பலியாகியுள்ளார்கள். ஈரானின் சியஸ்டான் - பலுசிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் பதுங்கும் இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட இரு வருடங்களாக ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அங்கும் போர்ச்சூழல் உருவாகியுள்ளது. காசாவில் 25,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள். ஹமாஸ்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் துறைமுகத்துக்கு செங்கடல் பாதையில் செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து பாகிஸ்தான் - ஈராக் இடையிலான தாக்குதல்களும் உயிர் பலிகளும் பலரையும் கவலைகொள்ளச் செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in