சிறுமி கொலை: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி, அதிமுக சார்பாக பந்த் அறிவிப்பு

அனைத்து அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல செயல்படும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.
சிறுமி கொலை: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி, அதிமுக சார்பாக பந்த் அறிவிப்பு
ANI

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இண்டியா கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் நாளை (மார்ச் 8) முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 9 வயதுச் சிறுமி கடந்த சனிக்கிழமை காணாமல் போனார். பிறகு, கடந்த செவ்வாயன்று அம்பேத்கர் நகர் வாய்க்காலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என புதுச்சேரியில் பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள். சோலை நகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறுமி கொலை தொடர்பாக விவேகானந்தன் (57), கருணாஸ் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். கைதான இருவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முத்தியால்பேட்டை காவல்நிலையக் காவலர்கள் 13 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். சிறுமி கொலை வழக்கில் மெத்தனமாகச் செயல்பட்டதாகப் புகார் எழுந்ததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இண்டியா கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் நாளை (மார்ச் 8) முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. முழு அடைப்பு காரணமாக புதுச்சேரியில் காலை மற்றும் மதியக் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாகத் திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

சில அரசியல் கட்சிகள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார். எனவே மாணவர்கள் அச்சம் கொள்ளாமல் தேர்வில் கலந்துகொள்ளலாம். அனைத்து அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in