உதயநிதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம்

முன்னதாக, இதுபோன்ற கருத்துகளின் விளைவுகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடந்தாண்டு செப்டம்பர் 2-ல் சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்தியது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியாவைப் போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றார். இந்த மாநாட்டில் ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்றார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதிலுமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. பல்வேறு மாநிலங்களில் இவருக்கு எதிராக வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபுவுக்கு எதிராக ஹிந்து முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஏற்கெனவே நிறைவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் வழக்கின் தீர்ப்பை இன்று அளித்தார். உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறு என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். மேலும், "சனாதனத்தை ஹெச்ஐவி, மலேரியா மற்றும் டெங்குவுடன் ஒப்பிட்டது அரசியலமைப்புக் கொள்கைகளுக்கு எதிரானது. இது போலித் தகவல்களைப் பரப்புவதற்குச் சமம். அரசியலமைப்புப் பொறுப்பை வகிக்கும் ஒருவர் பிரிவினைக் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது. அரசியலமைப்புப் பதவிகளை வகிப்பவர்கள், அரசியலமைப்புக் கொள்கைகள் தவிர வேறு எதையும் முன்வைக்கக் கூடாது" என்றார்.

மேலும், இதுதொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு நீதிமன்றத்திலும் குற்றம் நிரூபனம் ஆகவில்லை. எனவே, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தற்போதைய நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறிய உயர் நீதிமன்ற நீதிபதி, மனுதாரர்களின் மனுவை நிராகரித்து வழக்கை முடித்துவைத்தார்.

முன்னதாக, உத்தரப் பிரதேசம், கர்நாடகம், பிஹார், மஹாராஷ்டிரம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் எனப் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றிணைப்பது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபன்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு உதயநிதி ஸ்டாலின் வழக்கை விசாரித்தது. நீங்கள் சாதாரண மனிதரல்ல, ஓர் அமைச்சர் என்ற உச்ச நீதிமன்றம், இதுபோன்ற கருத்துகளின் விளைவுகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்று சாடியது. மேலும், இந்த வழக்கு விசாரணை மார்ச் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in