கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: https://twitter.com/ptrmadurai

பிரதமரைச் சந்தித்தது ஏன்?: அமைச்சர் பிடிஆர் விளக்கம்

கடந்த பிப்ரவரி 27-ல் பிரதமர் மோடி மதுரைக்கு வந்தபோது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவரைச் சந்தித்திருக்கிறார்.
Published on

பிரதமர் நரேந்திர மோடியைப் பணி நிமித்தமாகவே சந்தித்ததாக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த வாரம் இருநாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்தார். கடந்த பிப்ரவரி 27-ல் திருவனந்தபுரத்திலிருந்து தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதை முடித்துக்கொண்டு மதுரை புறப்பட்டுச் சென்றார். மதுரையில் பிரதமர் மோடியை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்திருக்கிறார். இதுதொடர்பான தகவல்கள் எதுவும் அப்போது வெளியாகவில்லை.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை நேற்று தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருந்தார். சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 27-ல் சந்தித்த புகைப்படம் வெளியானது. இதுதொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தான் அவரைப் பணி நிமித்தமாகவே சந்தித்ததாகத் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பிரதமர் செல்லும் இடங்களிலெல்லாம், அவரை வரவேற்று தேவையான உதவிகளை செய்து கொடுத்து வழியனுப்பி வைப்பது அந்தப் பகுதியில் ஆட்சியில் உள்ள அரசின் பொறுப்பு. இதன் அடிப்படையில் முதல்வர் அலுவலகத்திலிருந்து வந்த உத்தரவின் பெயரில் நான் இதை நிறைவேற்றினேன். அரசுப் பணியாகவே இதைச் செய்துள்ளேன். இதில் தனிநபர் விருப்பமோ, அரசியலோ கிடையாது" என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in