பொன்முடியின் தொகுதி காலி: சட்டப்பேரவைச் செயலகம் கடிதம்

தமிழ்நாட்டில் இரு சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன.
அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடிபடம்: எக்ஸ் தளம் | கே பொன்முடி எம்எல்ஏ

பொன்முடியின் திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

2006 - 2011 திமுக ஆட்சியின்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.72 கோடி சொத்துக் குவித்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையானது 30 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாகவும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பில் கடந்த பிப்ரவரியில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை வகிப்பதற்கானத் தகுதியை அவர் இழந்தார். இவர் வகித்து வந்த உயர்கல்வித் துறை, கூடுதல் பொறுப்பாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவைச் செயலர் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக, பொன்முடியின் திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதியைக் காலியானதாக அறிவிக்கக்கோரி சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் அதிமுக மனு அளித்திருந்ததுு.

ஏற்கெனவே, விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் பொறுப்பை விஜயதரணி ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம், தமிழ்நாட்டில் இரு சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in