பிரதமர் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்காதது ஏன்?: ஆர்.எஸ். பாரதி விளக்கம்

"நல்ல திட்டத்தைக் கொண்டு வந்ததைப்போலவும், அதை நாங்கள் தடுத்து நிறுத்துவதைப்போலவும் பிரதமர் மோடி பொய்ப் பிரசாரம் செய்வார்."
முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)படம்: ஏஎன்ஐ

பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்காததற்கான காரணத்தை திமக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு ஒரு நாள் பயணமாக வரும் பிரதமர் நரேந்திர மோடி கல்பாக்கத்தில் ஈனுலைத் திட்டத்தைத் தொடக்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். ஈனுலைத் திட்டத்தைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவில்லை.

இதனிடையே திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் ஈனுலைத் திட்டத்துக்கு எதிர்ப்புகள் கிளம்புவது குறித்து கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:

"நிச்சயமாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தத் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததற்கான காரணத்தை இதிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ளலாம். இதை முதல்வர் நாகரிகமாக ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதாலும், தேர்தல் நேரத்தில் ஒரு சர்ச்சை வேண்டாம் என்றும் முதல்வர் தவிர்த்துள்ளார்.

பிறகு, அவர்கள் ஒரு நல்ல திட்டத்தைக் கொண்டு வந்ததைப்போலவும், அதை நாங்கள் தடுத்து நிறுத்துவதைப்போலவும் பிரதமர் மோடி பொய்ப் பிரசாரம் செய்வார். அண்ணாமலையும், ஏதோ பணத்தை அள்ளிக் கொடுத்ததாகவும், நாங்கள்தான் அதைத் தடுத்ததாகவும் பேசுவார்.

எனவே, கருணாநிதியிடமிருந்து கற்றுக்கொண்ட ராஜதந்திரத்தின் மூலம் செயல்பட்டுள்ளார். இதை உணர்ந்து, மயிலாடுதுறையில் தனது கடமையை ஆற்ற அவர் சென்றுள்ளார்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in