திமுக கூட்டணியில்தான் போட்டி: திருமாவளவன் உறுதி

"முதல்வரைச் சந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அவரைச் சந்திப்போம்."
திருமாவளவன் (கோப்புப்படம்)
திருமாவளவன் (கோப்புப்படம்)ANI

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக இன்று பங்கேற்காத நிலையில், தாங்கள் திமுக கூட்டணியில்தான் போட்டியிடுவோம் என கட்சித் தலைவர் திருமாவளவன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் கட்சியின் உயர்நிலைக் குழு இன்று சென்னையில் கூடியது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். தேர்தல் அறிக்கைக் குழு, தேர்தல் நிதிக் குழு, தலைமையக ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தேர்தல் பரப்புரை ஒருங்கிணைப்புக் குழு ஆகிய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவற்றைத் தொடர்ந்து, திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்தும் திருமாவளவன் பேசினார்.

அவர் கூறியதாவது:

"திமுக நியமித்துள்ள தொகுதிப் பங்கீட்டுக் குழுவை இன்று பிற்பகல் 12 மணிக்குச் சந்திக்கவிருந்தது. உயர்நிலைக் கூட்டம் நிறைவடைய காலதாமதம் ஆகும் என்பதால் அந்தக் குழுவில் உள்ள முக்கியத் தலைவர், மூத்த அமைச்சரைத் தொடர்புகொண்டு உயர்நிலைக் கூட்டத்தை உடனடியாக நிறைவு செய்ய முடியாத நிலை இருக்கிறது என்பதால், இன்று வர இயலாததற்கு வருந்துகிறோம் எனத் தகவல் சொல்லியிருக்கிறோம்.

இதன் அடிப்படையில் ஓரிரு நாள்களில் மீண்டும் உரிய நேரத்தை ஒதுக்கீடு செய்து பேச்சுவார்த்தையில் பங்கேற்போம். முதல்வரைச் சந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அவரைச் சந்திப்போம்.

திமுக கூட்டணியில் முதலில் 4 தொகுதிகளைக் கேட்டிருந்தோம். 2 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என 3 தொகுதிகளையாவது கேட்டுப்பெறுவது பயனாக இருக்கும் என்பதன் அடிப்படையில் உயர்நிலைக் குழுவில் சிலர் கருத்து தெரிவித்தார்கள்.

இந்தக் கூட்டணிக்குள் எந்தக் குழுப்பமும், அவசரமும், பதற்றமும் கிடையாது. திமுக கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம். இதே கூட்டணியில்தான் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம். திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியோடு இணைந்துதான் தேர்தலைச் சந்திப்போம். இதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. கூடுதலான தொகுதியைக் கேட்பதற்கான உரிமையும், தேவையும் இருக்கிறது என்பதால் கூடுதலாகக் கேட்கிறோம்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in