திமுகவுடன் எந்தப் பிரச்னையும் இல்லை: செல்வப்பெருந்தகை

"விசிக, மதிமுக ஆகிய கட்சிகளும் இன்னும் கூட்டணியில் கையெழுத்திடவில்லை."
செல்வப்பெருந்தகை (கோப்புப்படம்)
செல்வப்பெருந்தகை (கோப்புப்படம்)படம்: https://twitter.com/SPK_TNCC

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் திமுகவுடன் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்னும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவில்லை.

இதனிடையே, காங்கிரஸுக்கான கசப்பு மருந்து தங்களிடம் இருப்பதாக, அதிமுகவிடம் சூசகமாக கூட்டணிக்கான அழைப்பு வந்தது.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, திமுகவுடன் நட்புறவுடன் இருப்பதாகக் கூறினார்.

அவர் கூறியதாவது:

"எங்களுக்கு அகில இந்திய தலைமை உள்ளது. அவர்கள் புதுதில்லியிலிருந்து அடிக்கடி வந்து செல்ல முடியாது. தொலைபேசியில் பேசி வருகிறார்கள். எந்தப் பிரச்னையும் இல்லை. சுமூகமாக சென்றுகொண்டிருக்கிறது.

நல்ல எண்ணிக்கையில் காங்கிரஸ் போட்டியிடும். காங்கிரஸும் அதை விட்டுக்கொடுக்காது, அவர்களும் இதை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இருவரும் விட்டுக்கொடுத்தால்தான் சுமூக முடிவு வரும். விசிக, மதிமுக ஆகிய கட்சிகளும் இன்னும் கூட்டணியில் கையெழுத்திடவில்லை.

ஒரு புரிந்துணர்வுடன் ஒப்பந்தத்துக்குச் செல்லலாம் எனப் பேசி வருகிறார்கள். இதில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. இண்டியா கூட்டணியில்தான் அனைவரும் இருக்கிறோம் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். தொகுதிகள், எண்ணிக்கைகள் குறித்து பேசியவுடன் கையொப்பமிடுவோம்.

மக்கள் நீதி மய்யம் பொறுத்தவரை கமல்ஹாசனும் எங்களிடம் கேட்கவில்லை, இவர்களும் எதுவும் சொல்லவில்லை.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுடன் கூட்டணி வராது என்றார்கள். ஆனால், கூட்டணி அமைந்துவிட்டது. ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை என அனைத்துக் கட்சிகளுடனும் கூட்டணி இறுதியாகிவிட்டது. தென்னிந்தியாவிலேயே எங்களுடன் மிகுந்த நட்புறவில் இருக்கும் கட்சி திமுக. எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் கிடையாது. சுமூகமான முறையில் கூட்டணி ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுவோம்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in