திமுகவிடம் ஒரு தொகுதியைக் கேட்டுள்ளோம்: ஜவாஹிருல்லா

"எந்தத் தொகுதியாக இருந்தாலும், அதில் நாங்கள் போட்டியிடுவோம்."
முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுடன் ஜவாஹிருல்லா (கோப்புப்படம்)
முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுடன் ஜவாஹிருல்லா (கோப்புப்படம்)படம்: https://twitter.com/jawahirullah_MH

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியை ஒதுக்குமாறு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவிடம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் நல்ல செய்தி வரும் என்றார்.

அவர் கூறியதாவது:

"இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்றால், இண்டியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். எனவே, இண்டியா கூட்டணிக்கு ஆதரவாகவே மனிதநேய மக்கள் கட்சி செயல்படும். விரைவில் நல்ல செய்தியைத் தெரிவிப்போம்.

நாங்கள் மிகத் தெளிவாக உள்ளோம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாபநாசம் மற்றும் மணப்பாறை ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்த இரு தொகுதிகளும் எங்களுடைய விருப்பப் பட்டியலில் இல்லை. இருந்தபோதிலும்கூட நாங்கள் வெற்றி பெற்றோம். எந்தத் தொகுதியைக் கொடுத்தாலும்கூட வெற்றி பெறக் கூடிய ஒரு வல்லமை திமுக தலைமையிலான கூட்டணிக்கு உள்ளது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். எனவே, எந்தத் தொகுதியாக இருந்தாலும், அதில் நாங்கள் போட்டியிடுவோம். மிகவும் அழுத்தமாகவே தொகுதியை ஒதுக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறோம். தலைவரிடம் எங்களுடையத் தகவல்களை எடுத்துச் சொல்வோம் என டி.ஆர். பாலு தெரிவித்தார்" என்றார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தபோதிலும், மனிதநேய மக்கள் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்தது. கடந்தாண்டு நவம்பரில் கோவையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவு செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரியில் சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

திமுக கூட்டணியில் இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு குறித்து விசிக - திமுக இடையிலான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. மதிமுக - திமுக இடையிலான பேச்சுவார்த்தை இன்னும் தொடர்கிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in