தொகுதிப் பங்கீடு: பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்தார் அண்ணாமலை

7 பேர் அடங்கிய குழுவில் எல். முருகன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்twitter.com/annamalai_k

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் அடங்கிய பேச்சுவார்த்தைக் குழுவை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் மேடையைப் பகிர்ந்துகொண்டார்கள். எனினும், தொகுதிகள் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகள் குறித்து இன்னும் முடிவாகவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இன்னும் அதிகாரப்பூர்வமாக இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவின் அனுமதியுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தேசிய செயலாளர் மற்றும் தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா மற்றும் மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in