ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

ஆலையை மூடியது சரியே என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது - முதல்வர் மு.க. ஸ்டாலின்
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்ANI

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்குமாறு வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கடந்த மே 2018-ல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தார்கள். அப்போதிலிருந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்குமாறு வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வேதாந்தா நிறுவனத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020-ல் நிராகரித்தது.

இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

வழக்கை 5 நாள்கள் விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தப் பகுதிக்கு நிறுவனம் அளிக்கும் பங்களிப்பைக் கவனத்தில் எடுத்துக்கொண்டாலும்கூட, இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களினுடைய நலன்கள் மற்றும் ஆரோக்கியம் மிகமிக முக்கியம் என்றது. மேலும், நிறுவனம் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

நிறுவனத்தை மூட வேண்டும் என்பது முதன்மையான விருப்பமாக இல்லாதபோதிலும், தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதால், உயர் நீதிமன்றத்துக்கும், அதிகாரிகளுக்கும் நிறுவனத்தை மூட வேண்டும் என்று உத்தரவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, ஆலையைத் திறக்க அனுமதிக்குமாறு வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

ஆலையை மூடியது சரியே என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in