திமுக முற்றிலுமாக அகற்றப்படும்: பிரதமர் மோடி

"மோடியை மீறி இந்தியர்கள் மீது யாராலும் கை வைக்க முடியாது."
திமுக முற்றிலுமாக அகற்றப்படும்: பிரதமர் மோடி
ANI

திமுக முற்றிலுமாக அகற்றப்படும் என பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

இருநாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, இன்று காலை மதுரையிலிருந்து தூத்துக்குடிக்குப் புறப்பட்டார். அங்கு வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டு பயணத்தின் இறுதித் திட்டமாக திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

அனைவருக்கும் வணக்கம்!

நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மாளுக்கும் எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்து, இந்த நாட்டுக்காக உழைக்கும் நல்லாசிகளை எனக்குத் தர வேண்டுமென வேண்டுகிறேன். நெல்லை மக்களைப் பார்ப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. காரணம், நீங்கள் திருநெல்வேலி அல்வாவைப்போல இனிமையானவர்கள்.

நேற்று திருப்பூர், மதுரை சென்றிருந்தேன். இன்று திருநெல்வேலி வந்து உங்களைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் அனைத்துப் பிரிவினரும் பாஜக மீது மிகப் பெரிய நம்பிக்கையை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை பாஜக நிச்சயம் காப்பாற்றும். சமூக நீதி, நேர்மறையான அரசியல் உள்ளிட்டவற்றை எப்படி செயல்படுத்துகிறது என்பதை கவனிக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கையை பாஜக முழுவதுமாக நிறைவேற்றுவோம். இது மோடியின் உத்தரவாதம்.

தமிழ்நாட்டு மக்கள் எப்போது வருங்காலத்தைக் குறித்த தெளிவுடன் இருப்பார்கள். காரணம், இவர்கள் தொழில்நுட்ப அறிவில் மிகச் சிறந்தவர்களாக இருப்பார்கள். இதுதான் தமிழகத்தை பாஜகவுடன் நெருக்கமாக்குகிறது.

பாஜகவின் அணுகுமுறையும், சித்தாந்தமும் தமிழக மக்களின் எண்ணத்துடன் ஒத்துப்போகிறது. இரு சிந்தனைகளும் ஒத்துப்போவதால் பாஜக மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்தியா இன்று வேகமாக வளரக்கூடிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் வெளிநாடுகளுடன் போட்டியிட்டு இந்தியா முன்னேறி வருகிறது. இந்தத் துறையில் தமிழ்நாடும் முன்னேறிச் செல்கிறது. அதற்கான வளம் இங்கு இருக்கிறது. இந்த நாடு புதிய சிந்தனையோடு செயல்படுகிறது. தமிழ்நாடு இதில் பெரிய பங்காக இருக்கப்போகிறது.

வெளிநாடுகளில் இந்தியர்களைப் பெருமையுடன் பார்ப்பதற்கு மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு சாட்சி. இது நிலையான, உறுதியான வளர்ச்சியை நோக்கிய மாற்றம் என்பதை உணர்ந்து தமிழ்நாட்டு மக்கள், பாஜகவின் பின்னே வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்போதுதான் தில்லி, தமிழ்நாடு இடையிலான தூரம் குறைந்துள்ளது. நெருக்கமாக வந்துள்ளோம். அனைவருக்குமான திட்டங்களும் தென் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதியையும் சென்றடைந்துள்ளது. பாஜக அரசு செயல்படுவதற்கான சாட்சியாக இவை உள்ளன. குடிநீர் குழாய் உள்ள கிராமப்புற வீடுகளின் எண்ணிக்கை 21 லட்சம். இன்று 1 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பை வழங்கியுள்ளது. இதைப்போல 40 லட்சம் வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா 100 மடங்கு முன்னேறினால், தமிழ்நாடும் 100 மடங்கும் முன்னேறும். இது மோடியின் உத்தரவாதம். 10 ஆண்டுகளில் இந்தியா முழுக்க எய்ம்ஸ் மருத்துவமனையைத் திறந்தபோது தமிழ்நாட்டிலும் எய்ம்ஸ் மருத்துவமனையைத் திறக்கிறோம். 50 லட்சத்துக்கும் மேலான பயனாளிகள் இலவச சிகிச்சையைப் பெறுகிறார்கள்.

தமிழ்நாட்டின் நலனுக்காக நாங்கள் எடுக்கும் முயற்சிகள் எதற்கும் ஒத்துழைப்பு கொடுக்காத ஓர் அரசு இங்கு இருக்கிறது. மத்திய அரசு என்ன செய்தாலும் குறை சொல்கிறார்கள். இதையும் மீறி மக்களுக்கு நல்லது செய்து வருகிறோம்.

நாட்டைக் கொள்ளையடிப்பதற்காக மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை, வளர்ச்சியை இவர்கள் தடுக்கிறார்கள். ஆனால், உங்களுடைய மோடி அதை அனுமதிக்க மாட்டார்.

ஜனவரி 12-ல் ராமர் கோயிலைத் திறந்தபோது நாடே மகிழ்ச்சியில் இருந்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக தீர்மானத்தைக் கொண்டுவந்தபோது, திமுக வெளிநடப்புச் செய்தது. இதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களுடைய நம்பிக்கையை அவர்கள் எதிர்க்கிறோம் என்பதை நிரூபிக்கிறார்கள். வெறுப்பு அரசியலைப் பரப்புகிறார்கள்.

குடும்ப வளர்ச்சியைத் தவிர, மாநில வளர்ச்சியைப் பார்க்கவில்லை என்று நிரூபிக்கிறார்கள். பாஜக அப்படியல்ல. இதனால்தான், உங்கள் குடும்பத்திலிருந்து ஒரு தலித் குடிமகனை மத்திய அரசில் அமைச்சராக நியமித்துள்ளோம். ஹிந்தி வேறு, தமிழ் வேறு என்கிறார்கள். ஆனால், ஹிந்து பேசும் மாநிலத்திலிருந்து அவரை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்குகிறோம்.

எங்களுக்கும் நாடும், மக்களும்தான் முக்கியம். அபினந்தன் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தபோது ஒரு கீரல்கூட இல்லாமல் அவரைக் கூட்டி வந்தோம். இலங்கையில் 5 மீனவர்களுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. நான் அவர்களை மீட்டு கூட்டி வரவில்லையா..?

யாரால் நம் நாட்டு மக்கள் மீது கை வைக்க முடியும்? காரணம், இங்கிருப்பது மோடி. மோடியை மீறி இந்தியர்கள் மீது யாராலும் கை வைக்க முடியாது.

இந்த அரசுகளை எல்லாம் திருத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. திமுக பொய்வேஷம் போட்டு பிரித்தாளுகிறது. இதைத் தெளிவாக பார்க்க முடிகிறது. இனி திமுகவைப் பார்க்க முடியாது. திமுகவால் இனி இங்கு இருக்க முடியாது. காரணம், அண்ணாமலை வந்துவிட்டார். உங்களுடன் அண்ணாமலை இருக்கிறார். நீங்கள் தேடினாலும், திமுக கிடைக்காது.

பணம் சம்பாதிக்க உங்களுடைய மொழி, நம்பிக்கை, இனத்தைக் கேவலப்படுத்தி அந்த நம்பிக்கையை எதிர்க்கிற திமுக முற்றிலுமாக அகற்றப்படும்.

இன்று நாங்கள் ராக்கெட் ஏவுதளத்தைத் திறந்துவைத்துள்ளோம். அதில் ஒரு விளம்பரத்தைக் கொடுத்துள்ளார்கள். அதில் சீனாவின் கொடியை வைத்துள்ளார்கள். அந்தளவுக்குதான் அவர்களுக்கு நாட்டுப் பற்று உள்ளது.

இந்த மோடியிடம் 10 ஆண்டுகால ஆட்சி அனுபவம் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கான உறுதியான திட்டமும் உள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் 5-வது இடத்திலுள்ள இந்தியாவை 3-வது இடத்துக்கு உயர்த்தப்போகிறது. மோடியின் மூன்றாவது ஆட்சியில் இது நிகழப்போகிறது.

தமிழகத்தின் வளர்ச்சிக்குப் புதிய உத்வேகம், புதிய வேகம், புதிய மலர்ச்சி கிடைக்கும்.

2024 தேர்தலில் ஒருபுறம் வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்து பாஜக நிற்கிறது. திமுகவும், காங்கிரஸும் எதிர்புறத்தில் நிற்கிறது. அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறார்கள். அவர்களது குடும்பம் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்வீங்க என்று கேட்டுப் பாருங்கள். அவர்களிடம் பதில் இருக்காது. அதுவே அடுத்து யார் முதல்வர், அமைச்சர் என்று கேளுங்கள், இதற்கான பதில் நன்றாகத் தெரியும். வாரிசு அரசியலை முன்னெடுக்கிறார்கள். நாட்டைவிட குடும்பத்தை முக்கியமான நினைக்கிறார்கள். அவர்களுக்கு மக்களைப் பிரித்தாள வேண்டும். இது மட்டும்தான் அவர்களுடைய எண்ணம்.

நாட்டை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை. ஆனால், அவர்களது எண்ணம் ஈடேறப்போவதில்லை. என் மண், என் மக்கள் யாத்திரை மூலம் நாட்டை ஒற்றுமைப்படுத்த அண்ணாமலை நடக்கிறார்.

உங்களிடம் தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்ற ஏக்கம் அதிகமாக உள்ளது. அவ்வப்போது ஓரிரு வார்த்தைகளில் பேசுகிறேன். ஆனால், முழுமையாகப் பேச முடியவில்லை என்கிற ஏக்கம், வருத்தம் என்னிடம் உள்ளது.

என் மொழி புரியாத போதிலும், இத்தனை பேரும் என் மனதைப் புரிந்துகொண்டு எதிரே அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு வணக்கங்கள்.

எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்குக்கூட பாஜகதான் ஆட்சியமைக்கப்போகிறது என்று தெரிந்துவிட்டது. மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். இந்த நம்பிக்கை மட்டும் மாபெரும் வெற்றியாக மாறிவிடாது. நீங்கள் அனைவரும் வீடுவீடாகச் சென்று மக்களிடம் பேச வேண்டும். அப்போதுதான் 400 இடங்களுக்கும் மேலான வெற்றி கிடைக்கும்" என்றார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in