திமுக விளம்பரத்தில் சீன ராக்கெட் படம்: பிரதமர் விமர்சனத்துக்கு கனிமொழி விளக்கம்

தமிழ்நாட்டில் இஸ்ரோ ஏவுதளத்துக்கு சீனாவின் ஸ்டிக்கரை ஒட்டுகிறார்கள் - பிரதமர் நரேந்திர மோடி
திமுக விளம்பரத்தில் சீன ராக்கெட் படம்: பிரதமர் விமர்சனத்துக்கு கனிமொழி விளக்கம்

நாளிதழ் விளம்பரம் சர்ச்சையில், சீனாவை இந்தியா எதிரிநாடாக அறிவிக்கவில்லை என திமுக எம்.பி. கனிமொழி விளக்கமளித்துள்ளார்.

தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் இன்று காலை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியின்போது சுமார் 15 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதுதொடர்பாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தார். அந்த விளம்பரத்தில் சீன கொடி பொறிக்கப்பட்ட ராக்கெட் படம் இடம்பெற்றிருந்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதை எக்ஸ் தளத்தில் விமர்சித்தார். திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இந்த நாளிதழ் விளம்பரம் குறித்து விமர்சித்தார்.

அவர் கூறியதாவது:

"திமுக செயல்படாத ஒரு கட்சி. ஆனால் பெய்யான பாராட்டுகளை மட்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள். எங்களுடையத் திட்டங்களுக்கு இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். தற்போது எல்லையைக் கடந்து தமிழ்நாட்டில் இஸ்ரோ ஏவுதளத்துக்கு சீனாவின் ஸ்டிக்கரை ஒட்டுகிறார்கள். விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராகவில்லை. நீங்கள் கட்டும் வரிப் பணத்தில் இவர்கள் விளம்பரம் கொடுக்கிறார்கள். இந்தப் படத்தில் இந்தியாவின் படத்தைக்கூட இவர்கள் சேர்க்கவில்லை" என்றார் பிரதமர் மோடி.

இதனிடையே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி இதற்கு விளக்கம் தந்துள்ளார்.

அவர் கூறியதாவது:

"அந்தப் படத்தை உருவாக்கிய கலைஞர் யார் என்பது தெரியவில்லை. அந்தப் படத்தை எங்கிருந்து எடுத்தார் என்பது தெரியவில்லை. சீனாவை எதிரிநாடாக இந்தியா அறிவிக்கவில்லை. இந்தியப் பிரதமர் சீனப் பிரதமரை இந்தியாவுக்கு அழைத்து, இருவரும் மாமல்லபுரம் சென்றிருக்கிறார்கள். உண்மையை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், பிரச்னையைத் திசை திருப்ப காரணத்தைக் கண்டறிகிறார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in