தமிழகத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்: பிரதமர் மோடி (முழு உரை)

"மோடி வேலை செய்யும்போது அனைவருக்காகவும் வேலை செய்கிறார். ஏழைகளின் நலன்களுக்காகக் கடுமையாக உழைக்கிறார்."
தமிழகத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்: பிரதமர் மோடி (முழு உரை)

தமிழ்நாட்டில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

என் மண், என் மக்கள் நடைப்பயணத்தின் நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்திலிருந்து தனி விமானம் மூலம் கோவை சூலூர் விமானப் படைத் தளத்துக்கு வந்தடைந்தார். சூலூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் வந்தார். அங்கிருந்து திறந்தவெளி வாகனத்தின் மூலம் பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி வந்தார். உடன் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தார்கள். பொதுக்கூட்ட மேடையில் ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இருந்தார்கள்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:

வணக்கம்! பல்லடம் வருவது, உங்கள் அனைவருடனும் இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி. தமிழ்நாட்டின் இந்த கொங்குப் பகுதி இந்தியாவின் வளர்ச்சிக் கதையைப் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துகிறது. ஜவுளித் துறை மற்றும் தொழில் துறையில் மிகவும் துடிப்பான பகுதி இது.

தொழில் முனைவோர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பகுதி இது. நாட்டின் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் கொங்கு பகுதி முக்கியப் பங்காற்றுகிறது.

நண்பர்களே, இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது மிகப் பெரிய காவிக் கடலைப் பார்ப்பதைப்போல உள்ளது. மாநாட்டுக்கு வந்துள்ள அனைவருக்கும் மனதார வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகம் தேசியத்தின் பக்கம் இருப்பதை இந்தக் கூட்டத்தின் மூலம் நீங்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

2024-ல் தமிழ்நாட்டில் அதிகம் பேசப்படுவது பாஜகவைக் குறித்து மட்டும்தான். தமிழகம் இன்று நாட்டின் புதிய அரசியல் வளர்ச்சியில் புதிய மையாக மாறி வருகிறது. 2024-ல் ஒரு புதிய சரித்திரத்தைத் தமிழ்நாடு படைக்கவிருக்கிறது. இதற்கு முன்னோடியாக இந்த என் மண், என் மக்கள் யாத்திரை வெற்றிகரமாக நிறைவு பெற்றிருப்பது மிகப் பெரிய சான்றாக உள்ளது. இந்த நடைப்பயணத்துக்கு மிகப் பெரிய ஆதரவைக் கொடுத்துள்ளீர்கள்.

என் மண், என் மக்கள் என்ற பயணம் பெயரிலேயே சிறப்பை உணர்த்துகிறது. ஒவ்வொரு பாஜக தொண்டனுக்கும், மண்ணுக்கும் உள்ள பிணைப்பைக் காட்டுகிறது. ஒவ்வொரு பாஜக தொண்டனும், இந்த மண்ணும் கடவுளுக்கு சமமானவர்கள் என்று நான் கருதுகிறேன். நாடுதான் முதன்மை என பாஜக கருதுகிறது. இந்தச் சமூகத்தில் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் பாஜக தொண்டர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் பாஜகவுக்கு மிகப் பெரிய ஆதரவு வந்திருக்கிறது என்பதைக் குறிப்பாக கவனித்து வருகிறேன். இத்தனைக்கும் மேல் யாத்திரைக்குத் தலைமை தாங்கிய அண்ணாமலை மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்குமான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஒவ்வொரு வீடாகச் சென்று சேர்த்துள்ளார்.

தமிழ் மொழியும், தமிழ் பாண்பாடும் எனக்கு நெருக்கமானது மட்டுமல்ல, மிகச் சிறப்பு வாய்ந்ததும்கூட. அதனால்தான் ஐக்கிய அவைகள் சபையில் சில தமிழ்க் கவிதைகளை வாசித்தேன். என் தொகுதியில் காசி தமிழ்ச் சங்கமம் என்ற மிகப் சங்கமத்தை செய்து முடித்தேன்.

தமிழுக்காக இவ்வளவு செய்கிறீர்களே என்று கேட்டார்கள். நாடாளுமன்றத்தில் செங்கோலை உயர்ந்த இடத்தில் வைத்து அதற்கும் பெரிய மரியாதையைப் பெற்று தந்துள்ளேன்.

ஆகவே, இதுகுறித்து தமிழ் மக்கள் மிகுந்த ஆர்வமாக மட்டுமல்லாமல், என் மீது அன்பும் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கும் எனக்கு அரசியல் ரீதியான உறவு மட்டுமல்ல, மனதுக்கு நெருக்கமான ஓர் உறவாகவும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இது இன்று நேற்று அல்ல, பல ஆண்டுகாலகமாக தமிழ் மண்ணோடு இணைந்துள்ளேன்.

சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு 1991-ல் ஏகதாய் என்கிற யாத்திரை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி காஷ்மீரில் லால் சௌக் வரை சென்றது. இதை நான் வழிநடத்தினேன். அப்போது என் மனதில் இருந்தது இரண்டுதான். லால் சௌக் என்று சொல்லப்படும் இடத்தில் நம் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும். மற்றொன்று, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய வேண்டும். இந்த லால் சௌக்கில் நம் மூவர்ணக் கொடி இன்று நிரந்தரமாகப் பறந்துகொண்டிருக்கிறது.

அந்த சட்டப்பிரிவை ரத்து செய்து அதைத் தூக்கி குப்பையில் வீசி, மிகப் பெரிய வரலாற்றுச் சாதனையைச் செய்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் ஆட்சியிலிருந்ததில்லை. ஆனால், பாஜகவின் இதயத்தில் தமிழ்நாட்டுக்கு எப்போதும் இடம் உள்ளது.

தமிழ்நாட்டைக் கொள்ளையடித்துக்கொண்டிருந்த கொள்ளைக் கூட்டம் இதை உணர்ந்து, பாஜக பலம் பெருகி வருவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக மக்களிடம் பொய் கூறி, பிரிவினையை உண்டாக்கி நாற்காலியைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழக மக்கள் தூய்மையானவர்கள் மட்டுமல்ல, அறிவாளிகளும்கூட. இங்குள்ளவர்களின் கபட நாடகம் வெளியே வந்துவிட்டது. அவர்களுடைய தவறுகள், ஊழல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதனால் பாஜக மீது மக்களுக்கு பெரிய நம்பிக்கை வருகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக அங்கம் வகித்திருந்தபோது, அவர்கள் தமிழ்நாட்டுக்குக் கொடுத்ததைக் காட்டிலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக மூன்று மடங்கு அதிகமாக தமிழ்நாட்டுக்குக் கொடுத்துள்ளோம்.

திமுகவும், காங்கிரஸும் நண்பர்களாக இருந்துள்ளார்கள். மத்திய அரசில் மிகப் பெரிய பதவிகளை வகித்திருக்கிறார்கள். இருந்தபோதிலும், வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை. இதனால், வளர்ச்சியில் பங்களிக்க முடியவில்லை.

மோடி வேலை செய்யும்போது அனைவருக்காகவும் வேலை செய்கிறார். ஏழைகளின் நலன்களுக்காகக் கடுமையாக உழைக்கிறார். இதனால்தான், ஏழைகள் நாட்டில் குறைந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மோடியின் உத்தரவாதம் என்னவென்றால், மூன்றரை கோடி மக்களுக்கு இலவசமாக அரிசி கொடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் 40 லட்சம் பெண்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பைக் கொடுத்துள்ளோம். இதேபோல, மோடி உத்தரவாதம் என்றால், பிரதமரின் திட்டத்தின்கீழ் 6 லட்சம் வீடுகள் கட்டித் தந்துள்ளோம். மோடியின் உத்தரவாதம் இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடரும்.

தமிழ்நாட்டுக்கு வந்தபோது எம்ஜிஆர் நினைவுக்கு வந்தார். இலங்கைக்குச் சென்றபோது, அவர் பிறந்த ஊரான கண்டிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே மக்களிடத்தில் பேசினேன். இன்று அவர் எங்கு பணியாற்றினாரோ அந்த மண்ணுக்கு நான் வந்துள்ளேன்.

அவர் நல்லாட்சி நடத்தியதன் மூலம் தரமான கல்வி, நல்ல சுகாதாரத்தைக் கொடுத்துள்ளார். இதனால், இளைஞர்களும், பெண்களும் அவரைப் பெரிதளவில் மதித்து வந்தார்கள். இதனால், இன்றும் அவரை ஒப்பற்ற தலைவர் என்று புகழ்ந்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல், அவர் குடும்பத்தின் அரசியல் காரணமாக ஆட்சிக்கு வரவில்லை. அவரது அனைத்து ஆட்சியும் திறமையின் அடிப்படையில்தான்.

துரதிருஷ்டவசமாக இன்று எம்ஜிஆர்-ஐ அவமதித்ததைப்போல, கேவலப்படுத்தக்கூடிய வகையிலான ஆட்சிதான் திமுகவால் நடக்கிறது. எம்ஜிஆர்-க்குப் பிறகு இங்கு நல்லாட்சி என்றால், அது ஜெயலலிதாவின் ஆட்சிதான். அவர் முழுக்க முழுக்க தனது வாழ்நாள் முழுவதையும் பொதுநலனுக்காகவும், மக்கள் வளர்ச்சிக்காகவும் கொடுத்துள்ளார். சில நாள்களுக்கு முன்புதான் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த மண்ணிலிருந்து மீண்டும் ஒருமுறை அவருக்கு நான் அஞ்சலி செலுத்திக்கொள்கிறேன்.

ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகள் நான் நெருங்கி பணியாற்றிய பாக்கியம் கிடைத்திருக்கிறது. மக்களுடன் அவர் எப்படி தன்னைத் தொடர்புபடுத்திக்கொண்டு, மக்களுக்காக எப்படி வாழ்ந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எம்.ஜி.ஆர். கொள்கைகளைக் கடைபிடித்து, அதன்மூலம் மக்களின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் மட்டும்தான் அவர் பணியாற்றினார். இதன் காரணமாகத்தான் இன்றும் அனைவரது வீட்டிலும் அவர் நினைவுகூரப்பட்டு வருகிறார்.

மோடி உத்தரவாதம் என்பது நாட்டின் வளர்ச்சி. இதில் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பதும் உள்ளடங்கும். நாடு எப்படி வளர்கிறதோ, தமிழகமும் அதே வேகத்தில் வளர வேண்டும் என்பதை மோடியின் உத்தரவாதம் உறுதி செய்கிறது.

தமிழக மக்கள் நாட்டைக் குறித்து மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் மதிப்பும் கொண்டுள்ளார்கள். இதனால்தான், பாதுகாப்புகாக இரு தயாரிப்பு இடங்களைத் தேர்வு செய்தபோது, பாதுகாப்பு தொழிற்சாலைக்காக ஒரு இடம் தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து மிகப் பெரிய ராணுவத் தடவாளங்கள் தயாரிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணி என்ற கூட்டணி இருக்கிறது. இவர்கள் தமிழ்நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று முனைகிறார்கள். இவர்கள் தமிழ்நாட்டை வளர்ச்சியடைய அனுமதிக்க மாட்டார்கள்.

ராணுவத்துக்காக வாங்கிய பாதுகாப்பு உபகரணங்களில் கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சமாக வாங்கிய காங்கிரஸ் அரசு, இங்கு பாதுகாப்பு தளவாடம் அமைவதை அனுமதிப்பார்களா, இதன்மூலம் கிடைக்கும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்பைப் பெற அனுமதிக்குமா?.

முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் தொழில்முனைவோர்களுக்கு 2 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி வழங்கப்பட்டுள்ளது. இதெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் சாத்தியமாகமா?.

தமிழ்நாட்டில் வளர்ச்சிக்காக உழைத்து வருவதால் எதிர்க்கட்சிகள் என் மீது மிகுந்த கோபத்தில் உள்ளார்கள்.

நாம் புதிய பாரத்த்தை உருவாக்குவதற்கான பெரிய முயற்சியை எடுத்து வருகிறோம். இண்டியா கூட்டணியில் இருப்பவர்கள், மோடி நல்லதை செய்ய மாட்டார் என பொய்யான உருவத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார்கள்.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொள்ளையடிப்பதற்காக மட்டுமே கூட்டணி அமைத்துள்ளார்கள். அந்தக் கொள்ளையடிக்கும் கடையைப் பூட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

மத்தியில் இண்டியா கூட்டணி உருவாகியிருக்கிறது. இண்டியா கூட்டணி வெற்றி பெறாது என்பது தெரிந்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் கொள்ளையடிப்பதற்காக ஒரு கூட்டம் முயற்சித்து வருகிறது. அதனால்தான் அந்தக் கொள்ளையடிக்கக்கூடிய கடையை நாம் பூட்ட வேண்டும் என்று முயற்சிக்கிறோம்.

இதற்காக தமிழ்நாட்டில் நாம் நடத்திய என் மண், என் மக்கள் என்ற யாத்திரை இதற்கான பூட்டாக அமையும். தமிழகத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்.

பாஜக தொண்டர்கள் அனைவரும் மூன்றாவது முறையாக நல்லதொரு பாஜக ஆட்சி வர வேண்டும், வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களது ஆசியை, வாழ்த்துகளைப் பெற வேண்டும். இளைஞர்களுக்கான உத்தரவாதமாக மோடியின் உத்தரவம் உள்ளது. நீங்கள் அனைவரும் மக்களிடம் சென்று வாழ்த்துகளைப் பெற வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in