எம்ஜிஆருக்குப் பிறகு நல்லாட்சியைக் கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே: பிரதமர் மோடி

நல்லாட்சியை நடத்தியதன் மூலம் தரமான கல்வி, நல்ல சுகாதாரத்தைக் கொடுத்துள்ளார் எம்ஜிஆர்.
எம்ஜிஆருக்குப் பிறகு நல்லாட்சியைக் கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே: பிரதமர் மோடி

எம்ஜிஆர் ஆட்சிக்குப் பிறகு தமிழ்நாட்டில் நல்லாட்சியைக் கொடுத்தது ஜெயலலிதா மட்டும்தான் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

என் மண், என் மக்கள் நடைப்பயணத்தின் நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி குறித்து அவர் பேசியதாவது:

"தமிழ்நாட்டுக்கு வந்தபோது எம்ஜிஆர் நினைவுக்கு வந்தார். இலங்கைக்குச் சென்றபோது, அவர் பிறந்த ஊரான கண்டிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே மக்களிடத்தில் பேசினேன். இன்று அவர் எங்கு பணியாற்றினாரோ அந்த மண்ணுக்கு நான் வந்துள்ளேன்.

அவர் நல்லாட்சியை நடத்தியதன் மூலம் தரமான கல்வி, நல்ல சுகாதாரத்தைக் கொடுத்துள்ளார். இதனால், இளைஞர்களும், பெண்களும் அவரைப் பெரிதளவில் மதித்து வந்தார்கள். இதனால், இன்றும் அவரை ஒப்பற்ற தலைவர் என்று புகழ்ந்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல், அவர் குடும்பத்தின் அரசியல் காரணமாக ஆட்சிக்கு வரவில்லை. அவரது அனைத்து ஆட்சியும் திறமையின் அடிப்படையில்தான்.

துரதிருஷ்டவசமாக இன்று எம்ஜிஆர்-ஐ அவமதித்ததைப்போல, கேவலப்படுத்தக்கூடிய வகையிலான ஆட்சிதான் திமுகவால் நடக்கிறது. எம்ஜிஆர்-க்குப் பிறகு இங்கு நல்லாட்சி என்றால், அது ஜெயலலிதாவின் ஆட்சிதான். அவர் முழுக்க முழுக்க தனது வாழ்நாள் முழுவதையும் பொதுநலனுக்காகவும், மக்கள் வளர்ச்சிக்காகவும் கொடுத்துள்ளார். சில நாள்களுக்கு முன்புதான் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த மண்ணிலிருந்து மீண்டும் ஒருமுறை அவருக்கு நான் அஞ்சலி செலுத்திக்கொள்கிறேன்.

ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகள் நெருங்கிப் பணியாற்றுவதற்கான பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. மக்களுடன் அவர் எப்படி தன்னைத் தொடர்புப்படுத்திக்கொண்டு, மக்களுக்காக எப்படி வாழ்ந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எம்.ஜி.ஆர். கொள்கைகளைக் கடைபிடித்து, அதன்மூலம் மக்களின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் மட்டும்தான் அவர் பணியாற்றினார். இதன் காரணமாகத்தான் இன்றும் அனைவரது வீட்டிலும் அவர் நினைவுகூரப்பட்டு வருகிறார்" என்றார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in