பாஜகவுக்கு வருமாறு நாங்கள் யாரையும் அழைக்கவில்லை: அண்ணாமலை

"பெரிய புள்ளிகள் வரும்போது எங்கள் கட்சியிலும் பெரும் புள்ளிகள் இருக்கிறார்கள். அவர்களையும் சமாதானப்படுத்த வேண்டும்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

பாஜகவுக்கு வருமாறு தாங்கள் யாரையும் அழைக்கவில்லை என்றும் வருபவர்கள் தாமாகவே வருகிறார்கள் என்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மாற்றுக் கட்சியிலிருந்து முக்கியப் பிரமுகர்கள் பாஜகவில் இணைவார்கள் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். எனினும், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த எல். முருகன், மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணைவது ஒத்திவைக்கப்படுவதாக நேற்று தெரிவித்தார்.

இந்த நிலையில், அண்ணாமலை திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இதுதொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:

"பெரும்புள்ளிகள் நிறைய பேர் பாஜகவில் இணைவார்கள். நாங்கள் சொல்லும் இடத்தில் கட்சியில் இணைக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. சிலருக்கு தில்லி சென்று கட்சியில் இணைய வேண்டும் என விருப்பம்.

பெரிய புள்ளிகள் வரும்போது எங்கள் கட்சியிலும் பெரும் புள்ளிகள் இருக்கிறார்கள். அவர்களையும் சமாதானப்படுத்த வேண்டும். கட்சிக்குள் இத்தனை காலமாக உழைத்திருக்கிறார்கள். எனவே, வெளியிலிருந்து தலைவர்கள் கட்சிக்குள் வரும்போது, கட்சிக்குள் இருக்கும் தலைவர்களை சமாதானப்படுத்த வேண்டும். வருபவர்கள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்திருக்கலாம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினராக இருந்திருக்கலாம்.

பாஜக புதிய பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறோம். விஜயதரணி பாஜகவுக்கு வந்துள்ளார்கள். கன்னியாகுமரியில் பாஜக வலிமையான கட்சி, நிறைய தலைவர்களைக் கொண்டுள்ள கட்சி என்பது தெரியும். ஒரு சட்டப்பேரவை உறுப்பினர், இரண்டரை ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும்போது அதை ராஜினாமா செய்து பாஜகவுக்கு வந்துள்ளார்கள். அப்படி இருக்கும்போது கட்சிக்குள் நிறைய கலந்துபேசி, கட்சிக்குள் இருக்கும் தலைவர்களையும் சமாதானப்படுத்த வேண்டும். இது பாஜகவுக்கு இருக்கும் சவால்.

பாஜகவுக்கு வருபவர்கள் தேர்தலில் நிற்கக்கூடிய பலம் கொண்டவர்களாக வருகிறார்கள். எனவே, அவர்களுக்கான இடத்தை ஏற்படுத்த வேண்டும், மரியாதையாக அழைத்து வர வேண்டும், வந்தபிறகு அவர்களுக்குப் பிரச்னையை ஏற்படுத்தக் கூடாது என்று கட்சி விரும்பியது.

பாஜகவுக்கு வரும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாதவாறு தொண்டர்களும் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால்தான் பிரதமர் மோடி வரும்போது அதற்கு முந்தைய நாள் கவனம் முழுக்க பரப்புரை மீது இருக்க வேண்டும் என்று எண்ணினோம்.

பொறுத்திருங்கள், மிகப் பெரிய தலைவர்கள் இணையவுள்ளார்கள். அவர்கள் பாஜகவுக்கு வருகிறார்கள். பாஜகவும் அவர்களை அன்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். வருபவர்கள் யாரும் மற்ற மாநிலத்தைப் போல திரும்பிச் செல்லக் கூடாது, இதற்கான சூழலை ஏற்படுத்தி வருகிறோம்.

பாஜவைப் பொறுத்தவரை நாங்கள் யாரையும் அழைக்கவில்லை. வருபவர்கள் தாமாக வருகிறார்கள். பெரிய புள்ளிகள் இணையும்போது கட்சிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லாத வகையில் கொண்டுவருவதுதான் எங்களுடைய பணி" என்றார் அண்ணாமலை.

என் மண், என் மக்கள் நடைப்பயணத்தின் நிறைவு விழாவும், பாஜக பொதுக்கூட்டமும் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in