பாஜகவுடன் கூட்டணி: ஜி.கே. வாசன் அறிவிப்பு

"பாஜக கூட்டணி முழுமையடைந்த பிறகு தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும்."
பிரதமர் நரேந்திர மோடியுடன் தமாக தலைவர் ஜி.கே. வாசன் (கோப்புப்படம்)
பிரதமர் நரேந்திர மோடியுடன் தமாக தலைவர் ஜி.கே. வாசன் (கோப்புப்படம்)ANI

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நீண்ட நாள்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு முன்பு பாஜக கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும் பேசப்பட்டு வந்தன. இதனிடையே, தமிழ்நாட்டுக்கான பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனை நேற்று நேரில் சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து, ஜி.கே. வாசன் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறியதாவது:

"பாஜகவின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் நேற்று மாலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்துக்கு வந்து என்னைச் சந்தித்தார்கள். சுமார் 30 நிமிடங்கள் தமிழக அரசியல் நிலவரம் குறித்து, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பேசினோம். மேலும், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பாதை யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்துகொள்ளுமாறு என்னிடம் நேரில் அழைப்பு விடுத்தார்கள்.

நேற்று காலை பாஜகவிலிருந்து மேலிடத் தலைவர்களும் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், கட்சியின் தலைவர் என்ற முறையில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் கலந்துகொள்கிறேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து பாரத ஜனதா கட்சியின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராகக் கொண்ட பாஜகவில் அங்கம் வகிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மிக முக்கியமாக தாமக ஐயா மூப்பனார் காலத்திலிருந்து, இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, பிராந்தியக் கட்சியான தாமக, தேசியக் கண்ணோட்டத்தோடு செயல்படும் கட்சியாகவே ஆரம்பத்திலிருந்து இன்று வரை செயல்பட்டு வருகிறது.

மேலும் தாமக கருத்துகளை முறையாகக் கேட்டு ஆலோசனை நடத்தி மக்கள் நலன், இயக்க நலன், வளமான தமிழகம், வலிமையான பாரதம், இதன் மீதும், தமிழக மக்கள் மீதும், உலகத் தமிழர்கள் மீதும் அக்கறை கொண்டுள்ள கட்சிக்கு, அதேபோல மாநிலத்துக்காக எந்த இயக்கம் மத்தியில் பாடுபடும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

மேலும், இன்றைய சூழலில் தமிழ் மொழி, தமிழ்நாடு, தமிழர்கள், இந்திய மக்கள், தமிழ் கலாசாரம் இதை விரும்பும் மத்திய அரசு அதற்கு பிரதமரைக் கோடிட்டு காட்டி பல உதாரணங்களைக் கூற முடியும். மேலும் முக்கியமாக, இந்தியப் பொருளாதாரம், இந்தியப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதைக் கருத்தில் கொண்டு இந்த நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அனைத்து தரப்பு மக்களுடைய எண்ணங்களைத் தொடர்ந்து பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது. காமராஜர், மூப்பனார் ஆசியோடு இந்தப் பணியை நாங்கள் தொடர்வோம். இவர்களுடைய வழிகாட்டுதலின்படி சிறுபான்மையினர், எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த மக்களின் தேவைகளை, எதிர்பார்ப்பை, வளர்ச்சியை நன்கு உணர்ந்த கட்சியாக அவர்களுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கக்கூடிய நல்ல திட்டங்கள் தொடர, புதிய திட்டங்களைத் தொடங்க, செயல்படுத்த கூட்டணியில் அவர்களுக்கு நம்பிக்கையளிக்ககூடிய கட்சியாக தாமக செயல்படும்.

பாஜக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய வேண்டும் என்று விரும்புகிறோம். வரும் நாள்களில் பாஜக கூட்டணி முழுமை பெறும். மேலும் கூட்டணிக் கட்சிகள் வந்துசேரக்கூடிய நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. இதன்பிறகு, கூட்டணிக் கட்சிகளின் முழு எண்ணிக்கைக்குப் பிறகு, தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்கப்படும்."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in