ரூ. 37 ஆயிரம் கோடி நிதி கேட்டதில் மத்திய அரசு ஒரு ரூபாய்கூட தரவில்லை: முதல்வர் ஸ்டாலின்

"அனைத்தும் தமிழ்நாடு அரசு மாநில நிதியிலிருந்து செய்து தரப்படுகிறது."
ரூ. 37 ஆயிரம் கோடி நிதி கேட்டதில் மத்திய அரசு ஒரு ரூபாய்கூட தரவில்லை: முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பாராமுகமாக இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கடந்த டிசம்பரில் பெய்த கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடியில் இன்று வெள்ள நிவாரணம், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியதாவது:

"தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளத்தால் உயிரிழந்த 58 நபர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் உயிரிழந்த ஆடு, மாடு, கோழிகள் உரிமையாளர்களுக்கு ரூ. 34.74 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் என மொத்தம் ரூ. 382.25 கோடி வழங்கப்பட்டுள்ளது. மிதமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 1,000 என ரூ. 35.92 கோடி வழங்கப்பட்டுள்ளது. இரு மாவட்டங்களில் பாதிப்படைந்த வீடுகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 9.35 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் வீடுகளுக்குப் பழுதுபார்ப்பது, பயிர்சேத நிவாரணம், சிறு வணிகர்களுக்கான சிறப்பு கடன் திட்டம், தொழில் நிறுவனங்களுக்குக் கடன் உதவி திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன், துப்புறவுத் தொழிலாளர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் என உதவித் தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டேன்.

இந்த அறிவிப்புகளின்படி உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிவாரண உதவித் தொகை மற்றும் 1.79 லட்சம் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. சாலைகளை மறுசீரமைப்பு செய்ய ரூ. 343 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகின்றன."

இதைத் தொடர்ந்து, இரு மாவட்டங்களுக்கும் புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர், மத்திய அரசை விமர்சிக்கத் தொடங்கினார்.

அவர் பேசியதாவது:

"இவை எதற்கும் ஒன்றிய அரசு 1 ரூபாய்கூட கொடுக்கவில்லை. அவர்கள் 1 ரூபாய்கூட கொடுக்காதபோதும், இவற்றைக் கொடுத்தது ஸ்டாலின். இந்த அரசு உங்களுக்காகக் கொடுத்தது. தமிழ்நாடு அரசு மாநில நிதியிலிருந்து செய்து தரப்படுகிறது.

கடந்த டிசம்பரில் இரு மாபெரும் இயற்கை பேரிடர்களை சந்தித்தோம். இதனால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்ய ஒன்றிய அரசிடம் ரூ. 37 ஆயிரம் கோடி நிதியைக் கேட்டோம். அவர்களிடம் நிதி வரவில்லை என்பது மட்டுமல்ல. தேர்தல் வரப்போகிறதே, வாக்கு கேட்டு தமிழ்நாட்டு மக்களைச் சந்திக்க வேண்டும் என்கிற பயம் துளிகூட இல்லாமல் ஒன்றிய அரசும், நிதியமைச்சரும் பாராமுகமாக இருக்கிறார்கள்.

கேட்டால், உங்களிடம் சாதுர்யம் இருந்தால் நீங்கள் சாதித்திருக்கலாமே என ஆணவமாகப் பேட்டியளிக்கிறார். அவர் வகிக்கும் பதவிக்கு இது அழகல்ல. எங்களிடம் சாதுர்யம் இருந்ததால்தான் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிக் காட்டியிருக்கிறோம். உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் தொழில் தொடங்க தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள். காரணம், எங்களுடைய வளர்ச்சியைப் பார்த்துதான் வருகிறார்கள். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதலிடத்தை நோக்கி வருகிறது. இதற்குக் காரணம், திராவிட மாடல் அரசின் சாமர்த்தியம்.

ஒன்றிய அரசின் இடைக்காலத் தடைகளைத் தாண்டிதான் இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளோம். எத்தகைய இடர் வந்தாலும், யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்காமல் மக்கள் பணியாற்றும் ஆட்சிதான் திமுக ஆட்சி.

உங்களுக்காக களத்தில் இருக்கும் ஆட்சிதான் திமுக ஆட்சி. உங்கள் குடும்பங்களில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் இருப்பேன்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in