தில்லியில் சிக்கிய போதைப் பொருள் கடத்தல் கும்பல்: திமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!

இந்த கும்பல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை தொடர்பு வைத்துள்ளதாகத் தகவல்.
கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்
கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்ANI

சர்வதேச அளவில் இயங்கி வந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் தில்லியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளது.

இந்த கும்பல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை தொடர்பு வைத்துள்ளதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையின்படி, தேடுதல் வேட்டையின்போது, தில்லியில் தடை செய்யப்பட்டுள்ள ரசாயனப் பொருள் 50 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். உணவுப் பொருள் என்கிற போர்வையில் இந்தப் பொருள்கள் வெளிநாடுகளுக்குக் கப்பல் மற்றும் விமானங்கள் மூலம் கடத்தப்பட்டு வந்துள்ளன. இந்தக் கடத்தலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டு வந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் தலைமறைவாகியுள்ளார். இவரைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருள் எங்கிருந்து கிடைக்கிறது என்பது கண்டறியப்படவுள்ளது.

இதுதொடர்பான தகவல் நியூசிலாந்து சுங்க அதிகாரிகள் மற்றும் ஆஸ்திரேலிய காவல் துறையிடமிருந்து கிடைத்தன. தடை செய்யப்பட்டுள்ள ரசாயனப் பொருள் இரு நாடுகளுக்கும் கடத்தப்பட்டுள்ளன. இந்தப் பொருள்களின் மூலதனம் தில்லியிலிருந்து வந்துள்ளதாக அமெரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடமிருந்து கூடுதல் தகவல் கிடைத்தது.

தடைசெய்யப்பட்டுள்ள இந்த ரசாயனப் பொருளானது உலகளவில் பெரிய தேவை இருக்கிற போதைப்பொருள். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் ஒரு கிலோ ரூ. 1.5 கோடிக்கு விற்கப்படுகிறது.

இந்தக் கும்பலை ஒழிப்பதற்காக தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவிலிருந்து கூட்டாக ஒரு படை உருவாக்கப்பட்டது. 4 மாத தொடர் கண்காணிப்புக்குப் பிறகு, தில்லியில் மீண்டும் போதைப் பொருள் கடத்தல் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. மீண்டும் போதைப் பொருளை ஆஸ்திரேலியாவுக்குக் கடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

24 மணி நேர கண்காணிப்புக்குப் பிறகு தில்லி சிறப்புப் பிரிவு காவல் துறையினர் தில்லி மேற்கில் இந்தக் கும்பலின் சேமிப்புக் கிடங்கைக் கண்டறிந்தார்கள். பிப்ரவரி 15-ல் இதை உணவுப் பொருள்கள் மூலம் கடத்துவதற்கான பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் 50 கிலோ அளவில் தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருளைப் பறிமுதல் செய்தார்கள். இந்த இடத்திலிருந்து மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்புடைய 3,500 கிலோவை 45 முறை கடத்தியுள்ளதாக அவர்கள் தகவல் தெரிவித்தார்கள்.

இந்தக் கும்பலை முழுமையாகப் பிடிப்பதற்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளது.

தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தேடி வரும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் என்று அறியப்படுகிறது. இவர் தமிழில் மங்கை உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். மேலும், இவர் திமுகவினுடைய சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளராகவும் உள்ளார்.

இதைத் தொடர்ந்து, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் அவர் நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in