விஜயதரணி தகுதி நீக்கம்: சட்டப்பேரவைத் தலைவருக்கு காங்கிரஸ் கடிதம்!

"கன்னியாகுமரியிலிருந்து எம்.பி. பதவியை எதிர்பார்த்தார்."
செல்வப்பெருந்தகை (கோப்புப்படம்)
செல்வப்பெருந்தகை (கோப்புப்படம்)படம்: https://twitter.com/SPK_TNCC

சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி, சட்டப்பேரவைத் தலைவருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியிலிருந்து மூன்று முறை சட்டப்பேரவைக்குத் தேர்வான விஜயதரணி, தில்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

இதைத் தொடர்ந்து, விஜயதரணி மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

விஜயதரணி குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது:

"விஜயதரணி மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். கட்சியின் கொறடாவாக இருந்துள்ளார். மகளிரணியின் தேசியச் செயலராக இருந்துள்ளார். அவருக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுத்தோம். ஆனால், அவர் பாஜகவில் இணைந்துவிட்டார். எம்எல்ஏ பதவியை அவர் இழந்துவிட்டார். சட்டப்பேரவைத் தலைவருக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். கன்னியாகுமரியிலிருந்து எம்.பி. பதவியை எதிர்பார்த்தார். சட்டப்பேரவைக் குழுத் தலைவராக விரும்பினார். இவை அனைத்தையும் எங்களுடைய கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும். அவர்களைச் சென்று சந்திக்குமாறு கூறினேன்.

ஆனால், பாஜகவிலிருந்து அவருக்கு என்ன கிடைக்கும்?. கடந்த 15 வருடங்களாக அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் பாஜக சித்தாந்தத்துக்கு எதிராகப் பேசியவர், தற்போது பாஜகவில் இணைந்ததற்குக் காரணம் என்னவாக இருக்கக்கூடும்?" என்றார் அவர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்/சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்தல் வெற்றிக்குப் பிறகு கட்சி மாறினால், அவர்கள் மீது மக்களவைத் தலைவர்/சட்டப்பேரவைத் தலைவர் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். இதன்மூலம், மக்களவை உறுப்பினர்/சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். கட்சியின் கொறடா உத்தரவை மீறி சட்டப்பேரவையில் எதிர்த்து வாக்களித்தாலும், உரியவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஒரு கட்சியின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் கட்சி மாறினால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய முடியாது.

அதேசமயம், இந்தச் சட்டத்தின் கீழ் சட்டப்பேரவைத் தலைவர், சட்டப்பேரவை துணைத் தலைவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in