வாக்குறுதிகள் குறித்து அறிய வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்

"தேர்தலை ஒரேகட்டமாக நடத்துவதைக் கவனத்தில் கொண்டுள்ளோம்."
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் (கோப்புப்படம்)
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் (கோப்புப்படம்)ANI

வாக்குறுதிகள் அளிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளதுபோல, வாக்குறுதிகள் குறித்து அறிய வாக்காளர்களுக்கும் உரிமை இருக்கிறது என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான தயார்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அருண் கோயல் மற்றும் முக்கிய அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி சென்னை வந்தார்கள். இதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது. மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.

தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது, வாக்குச் சாவடிகளில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்துடனான கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, கட்சியின் கருத்துகளைத் தெரிவித்தார்கள்.

தேர்தல் குறித்து இருநாள்கள் ஆலோசனை நடத்திய நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறியதாவது:

"தேர்தலை ஒரேகட்டமாக நடத்த வேண்டும் என பெரும்பாலான அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. தேர்தல் அட்டவணை குறித்து முடிவெடுக்கும்போது இதைக் கவனத்தில் கொள்வோம். பணப்பட்டுவாடா மற்றும் இலவசங்களை விநியோகம் செய்வதைத் தடுக்க வேண்டும் என்றும் பெரும்பாலான கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

இணையவழி பணப் பரிவர்த்தனையைத் தீவிரமாகக் கண்காணிப்போம். வங்கிகள் மூலம் பணப் பரிமாற்றம் கண்காணிக்கப்படவுள்ளன.

தேர்தல் சின்னங்கள், வரிசையின்படிதான் ஒதுக்கப்படுகின்றன. முந்தைய தேர்தலில் ஒதுக்கப்பட்ட சின்னமே அடுத்த முறையும் ஒதுக்கப்பட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற தேசியக் கட்சிகள், பிராந்தியக் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்படுவதற்கு வேறு முறை இருக்கிறது.

மின்னணு வாக்கு இயந்திரம் நாட்டில் 40 வருடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவிபேட் இயந்திரம் கடந்த தேர்தலின்போது அனைத்துப் பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டன. எந்தப் புதிய அம்சமும் இல்லை. தொழில்நுட்பத்தில் மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளுக்கு வாக்குறுதியளிக்க எப்படி உரிமை இருக்கிறதோ, அதைப்போல வாக்குறுதிகள் நியாயமானதா, அதற்கான உரிய நிதி ஆதாரம் இருக்கிறதா என்பது குறித்து தெரிந்துகொள்ள வாக்காளருக்கும் உரிமை உள்ளது. எனினும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது" என்றார் அவர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in